வடக்கில் இராணுவத்தால் மீட்கப்பட்ட தங்கம்...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
தற்போது இராணுவ புலனாய்வு சபையின் பொறுப்பில் உள்ள தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபைக்கு அனுப்பி ஆய்வு செய்து அறிக்கையை அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவுவைப் பிறப்பித்தார்.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்தில் கொண்ட நீதவான், இந்த விசாரணைகளுக்குக் கோரப்பட்ட வேறு பல உத்தரவுகளையும் பிறப்பித்தார்
முதலாம் இணைப்பு
வடக்கில் உள்நாட்டு யுத்த காலத்தில் இராணுவத்தால் மீட்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக கொழும்பு தலைமை நீதிபதியிடம் சி.ஐ.டி (CID) தெரிவித்துள்ளது.
கடந்த 2009 இல் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதி காலக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களுக்கு சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு இருந்தது.
இந்த நகைகள் கடந்த 16 ஆண்டுகளாக இராணுவத்தின் வசமிருந்து வந்துள்ளது.
மீட்கப்பட்ட நகைகள்
இந்நிலையில், கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீட்கப்பட்ட நகைகள் காவல்துறையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
இந்த நகைகள் அனைத்தையும் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் அடையாளப்படுத்தப்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்படும் பொருட்களை பொதுமக்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை
இந்நிலையில், இறுதி யுத்தகாலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பொதுமக்களின் மீட்க்கப்பட்ட தங்கத்தை அவர்களிடம் கட்டாயம் ஒப்படைப்போம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தங்கங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இல்லாவிட்டால், அதனை ஒரு பொது நிதியத்தில் சேகரித்து அந்த பொது நிதியத்திற்கு அரசாங்கத்தினால் மேலும் நிதி போட்டு குறித்த வடக்கு பிரதேசத்தை கட்டியெழுப்புவோம் என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் வடக்கில் இராணுவத்தால் மீட்கப்பட்ட தங்கம் குறித்து விசாரணைகளை தொடங்கியுள்ளதாக கொழும்பு தலைமை நீதிபதியிடம் சி.ஐ.டி தெரிவித்துள்ளது.
