நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : வெளியானது காரணம்
புதிய இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இன்று (05) மதியவேளை இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலானது, "பூரு மூனா" என்ற பாதாள உலகக் குழு உறுப்பினருடன் நெருங்கிய தொடர்புடைய சுரேஷ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் வழிநடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்றை காட்டிக்கொடுத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீர்கொழும்பு சிறைச்சாலையானது குறுகிய கால கைதிகள் மற்றும் விளக்கமறியல் கைதிகள் ஆகிய இரு தரப்பினரையும் தடுத்து வைக்கும் ஒரு இடமாகும்.
அங்கு தற்போதைக்கு சுமார் 1800 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைக்குள் இருந்த இரு எதிரெதிர் குழுக்களுக்கிடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மோதல் தீவிரமடைந்ததை அடுத்து, சிறைச்சாலைக்குள் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது, சிறைச்சாலையின் விசேட விடுதிகளின் பூட்டுகளை உடைத்து, அங்கிருந்த விசேட கைதிகள் மீதும் வன்முறையில் ஈடுபட்ட கைதிகள் தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், ஒரு குழுவினர் போதை ஏறும் நோக்கில் சிறைச்சாலையிலுள்ள மருந்தகத்தை உடைத்து, அங்கிருந்த வலி நிவாரண மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
மூன்றாம் இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே இன்று (05) மதியம் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அந்தச் சிறைச்சாலையின் ஆண் மற்றும் பெண்“ கைதிகள் சிறைச்சாலை கூரை மிதேறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே இன்று (05) மதியம் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 35 பேர் இதுவரை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதலில் இரு கைதிகள் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயமடைந்த மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை
அத்துடன், காயமடைந்த கைதிகளில் மேலும் 10 பேருக்கு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

ஏனைய காயமடைந்தவர்கள் அதே வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்றை காட்டிக்கொடுத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்புக்காக காவல்துறையும், விசேட அதிரடிப்படையினரும் (STF) அழைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 25 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் கவலைக்கிடமாக இருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் காயமடைந்த ஏனைய 23 பேரும் தற்போது நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைதிகளின் இரண்டு குழுக்கள் இடையில் இந்த மோதல் இன்று (5) ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அங்கு நிலவும் பதற்ற நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதி
காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த கைதிகளில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நீர்கொழும்பு மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த மோதல் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |