மனித உரிமைகள் பேரவையில் சர்வதேசத்திற்கு தெளிவான செய்தி -அரசாங்கம் அறிவிப்பு
ஸ்ரீலங்காவில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதோடு, கருத்துச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகம், நாடாளுமன்றம் என அனைத்து தளங்களிலும் பரந்த ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த விடயத்தை எதிர்வரும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் மீறல் இடம்பெறுகின்றனவா என்பதை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது. இது மிகவும் பெறுமதி வாய்ந்தது. அதனைவிட காணாமல் போனோர் குறித்த அலுவலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 16 பேரை விடுவித்துள்ளோம். மேலும் பலரை விடுவிப்பது குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே சர்வதேசத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றன. அதனைவிட இந்த அனைத்து விடயங்களும் ஜனநாயக கொள்கைக்கேற்ப செயற்படுத்தப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சபை ஒத்திவைப்புவேளையிலும் கேள்வி கேட்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாங்கள் பரந்த ஜனநாயக ரீதியிலான கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். நாடாளுமன்றத்தில் மாத்திரமல்ல, சமூகத்தின் அனைத்து தரப்பிற்கும் இந்த ஜனநாயக சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெகுஜன ஊடகங்கள் மாத்திரமல்ல, சமூக ஊடகங்களிலும் விமர்சனங்களை எதிர்நோக்குகின்றோம்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க மக்களின் ஆர்ப்பாட்டங்களை தடுக்குமாறு காவல்துறை நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தாலும், அதற்கு நீதிமன்றம் இணங்கவில்லை. காரணம் அது மக்களின் அரசியல் யாப்பு ரீதியிலான உரிமை என நீதிமன்றம் அறிவித்தது. ஆகவே அனைத்து பக்கத்திலும் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றது எனத் தெரிவித்தார்.
