வரிசை யுகத்திற்கு முடிவு -அமைச்சர் வெளியிட்ட நம்பிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள வரிசை யுகத்துடன் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு அடுத்த மூன்று மாதங்களுக்குள் தீர்வு காணப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன(Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.
இன்று (ஜன. 11) நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் வரிசையில் நிற்பதாகவும், இது இலங்கை மட்டும் எதிர்கொள்ளும் பிரச்சினையல்ல என்றும் கூறினார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியே இந்நிலைமைக்கு முக்கியக் காரணமாகும் என அவர் தெரிவித்துள்ளார். "எந்த அரசாங்கமும் தனது ஆட்சியில் இருக்கும்போது பொருட்களின் விலை உயர்வை விரும்பாது. எந்த அரசாங்கமும் தனது மக்கள் வரிசையில் நின்றுஅரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுவதை விரும்புவதில்லை, ஆனால் சில நேரங்களில் இந்த பிரச்சினை இந்த நாட்டை, உலகத்தை எதிர்கொள்கின்றன. நாம் இதனை தெரிந்து கொள்ள வேண்டும்.
உலகளாவிய நெருக்கடியே இந்த நாட்டில் டொலர் நெருக்கடி ஏற்பட காரணம். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், இலங்கை கிட்டத்தட்ட 14 மில்லியன் டொலர்களை இழந்துள்ளது.
எனினும், சுற்றுலாத்துறை மீண்டு வருவதாலும், ஏற்றுமதி அதிகரித்து வருவதாலும் நெருக்கடியை சமாளிக்க முடியும் என்ற வலுவான நம்பிக்கை உள்ளது என்றார்.
அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் கூறினார்.