புற்றுநோய் தேங்காய் எண்ணெய் சர்ச்சை - சட்டநடவடிக்கை எடுக்காது அரசாங்கம்
இலங்கையில் தற்போது சர்ச்சைக்குரிய விடயமாக புற்றுநோயை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படும் தேங்காய் எண்ணெய் இறக்குமதியே அதிகம் பேசுபொருளாக உள்ளது.
இந்த தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்தவர்களுக்கு எதிராக தண்டனையை அமுல்படுத்துவது அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பல்ல என போக்குவரத்துதுறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை ஆராய்ந்து, இறக்குமதியாளர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுப்பது இலங்கை சுங்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பணிப்பாளரின் கடமை எனவும் குறித்த விடயத்தில் அரசாங்கத்தின் தலையீடு எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டு மக்கள், தங்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது, அவர்களது வாழ்க்கையை வளமாக்குவார்கள் என்ற நம்பிக்கையிலே எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.