விவசாயத்தை விஸ்தரிக்கும் வகையில் அறிமுகமாகிறது புதிய செயலி : வடக்கு ஆளுநர் உறுதி!
நட்புசார் விவசாயத்தை விஸ்தரிக்கும் நோக்கில் எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய கையடக்க தொலைபேசியின் மூலமாகவும் இலகுவாக பயன்படுத்தக்கூடிய வகையில் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இன்று (18) கிளிநொச்சி - இயக்கச்சிப் பகுதியில் வடக்கில் இரண்டாவது தென்னை முக்கோண வலய செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தென்னை முக்கோண வலயம்
"அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைவாக ஒரு இலட்சம் தென்னங்கன்றுகளை நாட்டும் நிகழ்வு இன்று கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் இடம்பெற்றறுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இந்த இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு ஆகிய 03 மாவட்டங்களுடன், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களும் உள்ளடக்கப்பட்டு தென்னை முக்கோண வலயம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த வலயத்தில் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பில் 03 மாதங்களுக்குள் நான்கு இலட்சத்து 50 ஆயிரம் தென்னம் பிள்ளைகளை பயிர்செய்கை செய்யும் நோக்குடன் இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த வலயத்திற்குள் உள்ள செய்கையாளர்களுக்கு இலவசமாக தென்னம் பிள்ளைகளை வழங்கும் இன்றைய நிகழ்வில், வடக்கில் மீள்குடியேற்றத்தின் பின்னர் வழங்கப்பட்ட தென்னம் பிள்ளைகள் இன்று மக்களின் வாழ்வாதாரமாக மாறியுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.
தொலைபேசி செயலி
அதேபோல இந்த தென்னை முக்கோண வலய திட்டத்தினூடாக வழங்கப்படும் தென்னம் பிள்ளைகளும், வட மாகாணத்தில் நலிவுற்றிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும்.
மேலும், விவசாயிகளுக்கு மேலுமொரு உதவிக்கரமாக நட்புசார் விவசாயத்தை விஸ்தரிக்கும் நோக்கில் எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய கையடக்க தொலைபேசி செயலி ஒன்றை அறிமுகபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது வடக்கில் விவசாய முதலீடுகளை மேற்கொள்ள விரும்புவோருக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும்." என்றார்.
மேலும், இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தை வட மாகாணத்தில் ஆரம்பிக்க ஆலோசனை வழங்கிய அதிபருக்கும் இதன்போது வட மாகாண ஆளுநர் தனது நன்றிகளை தெரிவித்தார்.














அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்