முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவால் சூடு பிடிக்கவுள்ள கொழும்பு அரசியல்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவுடன் புதிய கட்சியொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலரும் இந்தக் கட்சியில் இணையக்கூடிய சாத்தியம் இருப்பதாக சந்திரிகா குமாரதுங்கவின் ஊடகப்பிரிவு அதிகாரி ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதவிர, சந்திரிகா குமாரதுங்கவின் புதல்வரும் பிரித்தானியாவில் கால்நடை மருத்துவ அதிகாரியாகத் தொழில்புரிந்துவருபவருமான விமுக்தி, ஸ்ரீலங்கா அரசியலில் பிரவேசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம், நடைபெறவுள்ள தேர்தலில் தனது மகனை சுதந்திரக்கட்சியில் போட்டியிட நிறுத்தும்படி சந்திரிகா குமாரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் அந்தக் கோரிக்கைக்கு இதுவரை மைத்திரி அணியினர் பதிலளிக்கவில்லை.
அதேபோல, ஸ்ரீலங்காவின் எதிர்கட்சித்தலைவரான சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருந்தும் சந்திரிகா குமாரதுங்கவின் மகனுக்கு அழைப்பு வந்த போதிலும் அதற்கு சந்திரிகா தரப்பிலிருந்து இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன
இவ்வாறான சூழ்நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து பிரிந்து தற்போது சஜித் அணியில் இணைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம உள்ளிட்ட பலருடன் இணைந்து ஸ்ரீலங்காவின் முன்னாள் அரச தலைவி சந்திரிகா குமாரதுங்க புதியகட்சி ஒன்றை ஆரம்பிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.