பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் நினைவேந்தல்!
தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும் முதல் பெண் மாவீரரான 2ம் லெப். மாலதியின் 36ம் ஆண்டு நினைவேந்தலும் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
நேற்றைய தினம் (15) பிற்பகல் 3.00 மணியளவில் பிரித்தானியாவில் உள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் மகளிர் அமைப்பினரால் இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.
வளாகத்தில் மாவீரர் பொதுத் தூபி அமைந்துள்ள இடத்தில் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் திருமதி.சியாமளா, திருமதி.ஜெயந்தி, செல்வி.ரமணி, திருமதி.அருளினி , திருமதி.லதா ஆகியோர் பொதுச்சுடர்களை ஏற்றி வைத்தனர்.
தமிழீழ தேசிய கொடி
அதனைத் தொடர்ந்து தேசியக் கொடிகள் ஏற்றும் நிகழ்வில், பிரித்தானியாவின் தேசிய கொடியினை திருமதி .ஜெசிந்தா அவர்கள் ஏற்ற, தமிழீழ தேசிய கொடியினை திருமதி.பூங்குயில் ஏற்றிவைத்தார்.
பின்னர் பொது மாவீரருக்கான திருவுருவபடத்திற்கு திருமதி.துக்சி ஈகைச் சுடரினை ஏற்ற, முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியுடைய திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை திருமதி.அபிராமி ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து பன்னிருவேங்கைகளின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை திருமதி.நிலா ஏற்றிவைத்தார்.
அதன் பின்னர் மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
முதல் பெண் மாவீரர் மாலதியுடைய திருவுருவப்படத்திற்கான மலர் மாலையினை திருமதி.சதானா அணிவிக்க, பன்னிருவேங்களுக்கான மலர் மாலையினை திருமதி.கல்யாணி அணிவித்தார்.
அதன் பின்னர் இடம்பெற்ற, அக வணக்கத்தினைத் தொடர்ந்து மலர் வணக்கத்தினை திருமதி.தயாளினி ஆரம்பித்து வைக்க நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் ஈகை சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்தனர்.
பெண் விடுதலை
இவற்றைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றன,
அதன்படி, வரவேற்பு நடனத்தினை செல்வி.சர்வீகா வழங்கியிருந்தார், அதனைத் தொடர்ந்து பிரதான உரையினை திருமதி.பூங்குயில் தமிழிலும் நிகழ்வில் கலந்து கொண்ட இளைய தலைமுறைகள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் ஆங்கிலத்தில் செல்வி.சௌமியாவும் வழங்கியிருந்தனர்.
மாவீரர் மாலதியின் நினைவுப் பாடலுக்கு இளையவர்களான செல்வி.பிரணவி செல்வி.அபினா ஆகியோர் நடனம் ஒன்றினையும் வழங்கியிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து நினைவுக் கவிதையினை திருமதி.நிலா வழங்க, பாடல் ஒன்றினை செல்வி.சானுகா வழங்கியிருந்தார்.
எமது தேசத்தின் பெண் விடுதலை சார்ந்த தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கிய, பெண்கள் எழுச்சி நாளுக்குரிய சிறப்புரையினை செல்வி.நிறையரசி சோதிதாஸ் வழங்கியிருந்தார்.
எழுச்சிப் பாடல்களை பாடகர்கள் திரு.மைக்கல் திரு.சுரேஸ் ஆகியோர் பாடி, நிகழ்வினை எழுச்சி ஊட்டியிருந்தமை சிறப்பான விடயமாகும்.
இறுதியில் திருமதி.சத்தியவாணி நன்றி உரையுடன் உறுதி ஏற்பு நடைபெற்று, தேசியக் கொடிகள் கையேற்கப்பட்டு, நிகழ்வுகள் சிறப்புற நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.