கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர் வெளியிட்ட கருத்து!
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஒரே மாற்றுவழி ஜனாதிபதி பொது மன்னிப்பாகும். அதனை பெற்றுக்கொள்ளவே எதிர்க்கட்சி முயற்சிக்கவேண்டும் என ஆளும் கட்சி உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஆனால் ரஞ்சனுக்காக செயற்படுவதாக தெரிவித்துக்கொண்டு அடுத்த நாடாளுமன்ற தேர்தலிலும் அவர் போட்டியிடுவதை தடுப்பதற்கே முயற்சிக்கின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், ரஞ்சனுக்கு வழங்கப்பட்டிருக்கும் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கான தீர்ப்பு, ஐக்கிய தேசிய கட்சி அரசாங்க காலத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தீர்ப்பாகும். தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் தொடர்பில் ரஞ்சன் உட்பட எதிர்க்கட்சியினருக்கு நல்ல அபிப்ராயம் இருக்கின்றது. அதனால் நீதிபதிகள் ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கியதாக தெரிவிக்க முடியாது.
அத்துடன் ரஞ்சனுக்கு தற்போது உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்து சிறைத்தண்டனை வழங்கி இருக்கின்றது. நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை காலத்துக்கு பின்னரே வெளியில் வரமுடியும். அவ்வாறு இல்லாவிட்டால் இருக்கும் ஒரே மாற்றுவழி ஜனாதிபதி பொது மன்னிப்பை பெற்றுக்கொள்வதாகும்.
அதனால் ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்துக்கு அழைத்துவரவேண்டும் என தெரிவிக்கும் எதிர்க்கட்சியினர், உண்மையாகவே அவருக்காக செயற்படுவதாக இருந்தால், அவருக்கு பொது மன்னிப்பை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கவேண்டும்.
மேலும் விடுதலையாவதற்கு ஒரேவழி ஜனாதிபதி பொது மன்னிப்பாகும் என்பதை ரஞ்சன் விளங்கிக்கொண்டிருக்கின்றார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.