ஈஸ்டர் குண்டு சூத்திரதாரிகளின் பிதாமகர் தேசிய மக்கள் சக்தியில் போட்டி? அதிருப்தியில் மக்கள்!!
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கு எதிராக நீதியான விசாரணைகளைச் செய்வோம் என்று அறைகூவல் விடுத்து வருகின்ற தேசியமக்கள் சக்தியில், ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை ஊக்குவித்தவராகக் கூறப்படுகின்ற ஒருவர் தேர்தலில் போட்டியிடுகின்ற சம்பவம் பற்றி தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றார்கள் மட்டக்களப்பு மக்கள்.
ஈஸ்டர் குண்டு சூத்திரதாரி சஹ்ரானை வழிநடத்தியதாகவும், கிலாபத்துடைய ஆட்சியை இலங்கையில் கொண்டுவர முற்படுபவர்களில் முக்கிய சூத்திரதாரியுமான ஒருவர் தேசிய மக்கள் சக்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டிபோடுவதாகவும் அவர்கள் சுட்டிக் காண்பிக்கின்றார்கள்.
ஈஸ்டர் குண்டு தாக்குதல்தாரிகளோடு மிக நெருங்கிய தொடர்பில் இருந்ததாக காத்தான்குடி மக்களால் குற்றம்சுமத்தப்படுகின்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் செயலாளராக இருந்த பிரதோஷ்நளிமி போன்றவர்களை தங்களது கட்சியில் வைத்துக் கொண்டு, தேர்தலில் அவருக்கு வாக்களிக்குமாறு கூறியும்கொண்டு மறுபுறம் ஈஸ்டர் குண்டு தாக்குதல் விசாரணைகளை நடாத்தப்போவதாக கூறும் தேசிய மக்கள் சக்தியின் அரசியலை மட்டக்களப்பு மக்கள் சந்தேகத்துடனேயே பார்க்கின்றார்கள்.
இலங்கையில் இலஞ்ச ஊழல் அற்ற ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையின் அடிப்படையில் ஆட்சி நடத்தப்போவதாக கூறி ஜனாதிபதி பதவிக்கு வந்த அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தியுள்ள வேட்பாளர் ஒருவர் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டவராக உள்ளார் என்று கூறும் மக்கள், மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் மிக தீவிர இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வெளியிட்டுச் செயற்பட்டுவந்த பிரதோஷ்நளிமி என்பவர் எவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்டார் என்ற கேள்வியை எழுப்புகின்றார்கள்.
இது தொடர்பாக, மட்டக்களப்பு காத்தான்குடி மக்கள் கூறுகின்றபோது, 'ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் செயலாளராக இருந்த பிரதோஷ்நளிமி தீவிர மத அடிப்படைவாதத்தை வெளிப்படுத்திச் செயற்படுத்திவந்தவர் என்று கூறுகின்றார்கள்.
'காத்தான்குடியில் வாழ்வது நூறு வீதம் முஸ்லீம்கள் இல்லை' என்று கூறி வகாபிசக் கொள்கையை காத்தான்குடியில் மிக தீவிரமாக நடைமுறைப்படுத்தி காத்தான்குடியில் வாழும் சிறுபான்மை சூபி முஸ்லீம்களுக்கு எதிராக காத்தான்குடியில் உள்ள வாகாபிச இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தாக்குதல்களை நடாத்தும் அளவுக்கு மிகத் தீவிர வகாபிச கொள்கையை காத்தான்குடி இளைஞர்கள் மத்தியில் விதைத்தவர்' என்று குற்றம் சுமத்துகின்றார்கள்.
'வகாபிச கொள்கைகளுக்கு எதிராக உள்ளவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை காத்தான்குடி மக்கள் மத்தியில் தூண்டிய நபர்களின் இந்த பிரதோஷ்நளிமியும் ஒருவர்' என்றும் கூறுகின்றார்கள்.
இவ்வாறானவர்களை தேசிய மக்கள் சக்தி தனது நாடாளுமன்ற வேட்பாளராக உள்வாங்கியதானது தமக்கு பாரிய அதிருப்தியை ஏற்படுத்துவதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றார்கள்.
'காத்தான்குடியில் உள்ள ஏனைய சூபி முஸ்லீம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் அளவுக்கு பிரதோஷ்நளிமி போன்றவர்களினால் உருவாக்கப்பட்ட வகாபீச கொள்கைகளும் அவர் மேடைகளில் பேசிய பேச்சுக்களுமே பிற்காலத்தில் சஹரான் போன்றவர்கள் உருவாக காரணமாக அமைந்தது' என்று கூறும் மௌலவி ஒருவர், 'காத்தான்குடியில் 2001 ம் ஆண்டு 2002ம் ஆண்டு காலத்தில் சூபி முஸ்லீம்களுக்கு எதிராகவும், பயில்வான் தரப்பினருக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரங்களினால் பல பள்ளிவாசல்கள், சூபி முஸ்லீம்களுக்கு சொந்தமான வீடுகள், சொத்துகள் சூறையாடப்பட்டு அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு பலர் காயமடைந்து காத்தான்குடியில் வாழ முடியாமல் சூபி முஸ்லீம்கள் அகதிகளாக ஆரையம்பதி பகுதியில் தஞ்சமடைந்திருந்த சம்பவங்களையும் எடுத்துக் காண்பிக்கின்றார்கள்.
இவற்றுக்கெல்லாம் பிரதான காரணம் இந்த பிரதோஷ்நளிமி அங்கம் வகித்த சூராசபையில் உள்ளவர்கள் தான் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள்.
இது குறித்து பல நீதிமன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றார்கள்.
ஈஸ்டர் குண்டு தாக்குதல்தாரிகளோடு மிக நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் பத்துவா தலைவராகவும் சூராசபையின் முக்கியஸ்தர் ஆகவும் இருந்த பிரதோஷ்நளிமி போன்றவர்களை தங்களது கட்சியில் வைத்துக் கொண்டு, அவருக்கு வாக்களிக்குமாறு கூறிக் கொண்டு, மறுபுறம் ஈஸ்டர் குண்டு தாக்குதல் விசாரணைகளை நடாத்தப்போவதாக கூறும் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எவ்வாறு நம்ப முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |