வீதி அமைக்க கோரியவருக்கும் மன்னார் நகரசபை தலைவருக்கும் இடையில் முரண்பாடு
மன்னார் பாத்திமாபுரம் பகுதியில் வீதி ஒன்று அமைக்கும் போது நபர் ஒருவருக்கும் மன்னார் நகரசபை தலைவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்த நிலையில் காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், ”மன்னார் நகரசபைக்கு சொந்தமான எமில்நகர் எல்லையில் உள்ள பாத்திமாபுரத்தில் நகரசபைக்கு சொந்தமான வீதிகளில் நேற்று (30) கிரவல் பரவும் நடவடிக்கை இடம்பெற்று வந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தங்கள் பகுதி வீதியையும் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
சம்மந்தப்பட்ட நபர் தொடர்ச்சியாக வீதியை அமைத்து தரக்கோரி பல முறை நகரசபை தலைவரிடம் முன்னதாகவே கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதி
இந்த நிலையில் வீதியை அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்த மன்னார் நகரசபை தலைவரிடம் நேரடியாக நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தும் எங்கள் பகுதி வீதியை அமைக்காது தனிபட்ட நபர் ஒருவருக்காக இந்த வீதியை அமைக்க முன்னிற்பது சரியா என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதனையடுத்து இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் குறித்த நபரை அவ்விடத்தில் இருந்து வெளியேறுமாறு நகரசபை தலைவர் தெரிவிக்க குறித்த நபர் வெளியேற மறுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நகரசபை தலைவர் குறித்த நபரை தள்ளி விட்டு அவர் மீது தாக்குதல் நடத்தியதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
காவல் நிலையத்தில் முறைப்பாடு
அதனை தொடர்ந்து இருவரும் மாறி மாறி தாக்கிக்கொண்ட நிலையில் பரஸ்பரம் கற்களாலும் எறிந்த நிலையில் அதிகளவு தாக்குதலுக்கு உள்ளான எமில்நகரை சேர்ந்த நபர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சண்டையின் போது கற்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது அங்கே இருந்த நகரசபை பெண் உறுப்பினர் மீது கற்கள் எறியப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பெண் உறுப்பினரும் மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்