கிளிநொச்சியில் குடிநீர் நெருக்கடி : கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள்
கிளிநொச்சி (Kilinochchi) பகுதியில் பொதுமக்கள் நீண்ட காலமாக கடும் குடிநீர் நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிளாலி கிராம அலுவலர் பிரிவில் பொது மக்களே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளாலி பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான கிணறுகளின் நீர் உவர் நீராகவும், கடும் காவி நிறத்திலும் காணப்படுகிறது. இதனால் பொது மக்களால் குறித்த நீரை பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுகிறது.
வடிகாலமைப்புச் சபை
இருப்பினும், வேறு வழியின்றி குடிப்பதனை தவிர இதர தேவைகளுக்கு அந்த நீரையே பயன்படுத்தி வருகின்றனர்.
கடும் காவி நிறத்தில் உள்ள நீரில் ஆடைகளை கழுவுதன் மூலம் அவை நிறம் மாறி அழுக்கு ஆடைகள் போன்று காணப்படுகிறது எனவும் பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குடிநீருக்கு ஊரில் உள்ள ஒரு சிலரின் கிணறுகளுக்கு சென்று மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நீரை பெறுவதோடு பிரதேச சபையினால் ஆங்காங்கே நீர்த்தாங்கி வைத்து வழங்கப்படுகின்ற நீரும் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை எனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மூலம் வழங்கப்படுகின்ற நீரை விரைவுப்படுத்தி வழங்குவதோடு, ஏனைய கிராமங்களில் வழங்கப்பட்டது போன்று தங்களுக்கும் இலவசமாக நீர் இணைப்பினை வழங்குவதற்கு நடவடிக்கையினை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
