அரச அனுசரணையுடன் நாட்டிற்குள் போதைப்பொருட்கள் - சாடும் விமல் வீரவன்ச
நாட்டுக்கு அரச அனுசரணையுடன் போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன, அரச அனுசரணையுடன் அவை கைப்பற்றப்படுகின்றன என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்
மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரான புவக்தண்டா எனும் சனா என்பவரே தெற்குக்கு படகில் பெருந்தொகையான போதைப்பொருட்களை கொண்டு வந்தார் என விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (2) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச புலனாய்வு பிரிவு
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தெற்கு மாகாணத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.
இந்த அரசாங்கத்தில் தான் 323 கொள்கலன்கள் எவ்விதமான பரிசோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்டன.
போதைப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் இலங்கைக்கு வருவதாக சர்வதேச புலனாய்வு பிரிவு அறிவித்த போதும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
பொறுப்பற்ற வகையில் செயற்பட்டு விட்டு இன்று பிறர் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள்.
அரச அனுசரணையுடன் போதைப்பொருட்கள்
அரச அனுசரணையில் தான் போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டன, அரச அனுசரணையுடன் தான் போதைப்பொருட்கள் தற்போது கைப்பற்றப்படுகின்றன.
கைப்பற்றப்படும் போதைப்பொருள் தொகைக்கும்,தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று அரசாங்கத்தால் குறிப்பிட முடியாது. மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரான புவக்தண்டா எனும் சனா எனும் போதைப்பொருள் வியாபாரி அண்மையில் கைது செய்யப்பட்டார்.
அவரை விடுவிப்பதற்கு அரசியல் தரப்பில் இருந்து கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. இந்த சனா தான் படகு ஊடாக அம்பாந்தோட்டை பகுதிக்கு போதைப்பொருட்களை கொண்டு வந்துள்ளார்.
ஆகவே பிறரை குற்றஞ்சாட்ட முன் தமது தரப்பின் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் ஆராய வேண்டும் என்றார்.
