இலங்கை காவல்துறையின் முகநூல் பதிவு குறித்து முறைப்பாடு
இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் அச்சுறுத்தல் தொனியிலான பதிவுக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
YOUTH FOR CHEnge அமைப்பு இன்று (22) வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
“Think Twice Before You Open Your Mouth” (வாய் திறப்பதற்கு முன் இருமுறை சிந்தியுங்கள்) என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்ட பதிவு அச்சுறுத்தல் தொனியில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உத்தியோகபூர்வ முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
முறைப்பாட்டைப் பதிவு செய்யும் நடவடிக்கை
இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்யும் நடவடிக்கையில், YOUTH FOR CHEnge அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி மகாவிட்ட, தேசியக் குழு உறுப்பினர் உதார சந்தருவன் மற்றும் கொழும்பு மாவட்டக் குழு உறுப்பினர் டெரன்ஸ் ரொட்ரிகோ ஆகியோர் இணைந்துள்ளனர்.
'இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் குறித்த பதிவின் பின்னணி மற்றும் அதன் நோக்கம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே இந்த முறைப்பாட்டின் முக்கியத்துவமாகக் கருதப்படுகிறது" என அந்த அமைப்பு கூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |