முல்லைத்தீவில் தென்பகுதி மீனவர்களுக்கு கொரோனா -மருத்துவமனை செல்லவும் பி சி ஆர் பரிசோதனைக்கும் மறுப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாயாறு பகுதியில் பருவத்தொழிலுக்கு வருகைதரும் தென்பகுதி மீனவர்களால் முல்லைத்தீவு மீனவ சமூகம் பல்வேறு இன்னல்களை தொடர்ந்து எதிர்கொண்டு வந்துள்ளது.
தொடர்ச்சியாக பல வருடங்களாக இடம்பெறும் கூட்டங்களிலும் கலந்துரையாடப்பட்டும் வருடாவருடம் அதிகளவான மீனவர்கள் இங்கு வந்து தொழிலில் ஈடுபடுகின்றனர் இங்கு வருகைதரும் மீனவர்கள் இங்கு குடியிருக்க அனுமதி வழங்கப்படாத நிலையிலும் அவர்கள் கடற்கரை பகுதிகளில் வாடிகளை அமைத்து அங்கு சடடவிரோதமாக தங்கியிருந்து மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு கலந்துரையாடல்களில் குறித்த பகுதியில் மலசல கூடங்கள் கூட இல்லாத நிலையில் பாரிய சுகாதார சிக்கல்கள் உள்ளது எனவும் மீனவர்களுக்கும் இவர்களால் பாதிப்பு எனவும் இவர்களுக்கு இங்கு அனுமதிகளை வழங்க வேண்டாம் என்றும் தொடர்ச்சியாக கூட்டங்களில் மணித்தியால கணக்காக பேசப்பட்டாலும் இன்றுவரை எந்த தீர்வும் அற்ற நிலையே காணப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலை மிக பாரதூரமான விளைவுகளை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு கொண்டுவந்துள்ளது தற்போதைய கொரோனா அபாய சூழலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாற்றுப் பகுதியில் அதிகளவான தென்பகுதியினை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் மிகவும் நெருக்கமாக சுகாதார அறிவித்தல்களை பேணாதவகையில் எதுவித சுகாதார கட்டுப்பாடுகளும் இன்றி குடியிருக்கின்றார்கள் இவர்களில் 28 பேருக்கு கடந்த 29 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று வெளியான முடிவுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று அவர்களை கொரோனா மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக சுகாதர பிரிவினர் பேருந்தினை கொண்டு சென்றபோது அவர்கள் மருத்துவமனை செல்ல மறுப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் முரண்பட்டுள்ளனர் .இந்நிலையில் நாட்டில் உள்ள சட்டத்தினை பயன்படுத்தி சுகாதார பிரிவினரின் கட்டளைக்கு அமைவாக நீண்ட நேரத்தின் பின்னர் 5 பேரையும் கொவிட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.
இதேவேளை இன்று குறித்த பகுதியில் அனைவருக்கும் பி சி ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க ஏற்பாடு செய்தபோதும் அதற்கும் குறித்த பகுதி மீனவரகள் ஒத்துழைக்கவில்லை.பல்வேறு சிரமங்களின் மத்தியில் இன்று 74 பேருக்கு மாத்திரமே பி சி ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க முடிந்ததாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.உமாசங்கர், குறித்த பகுதியில் பருவகால கடற்தொழிலுக்காக சுமார் 700 வரையான சிறுவர்கள் ,பெண்கள்,கரப்பிணிகள் என அனைவரும் வருகைதந்து மிகவும் நெருக்கமாக வசித்து வருகின்றார்கள்.
இவர்கள் தொடர்பான எந்தவித பதிவுகளும் இங்கு இல்லை. இவர்களை இனம்காண்பது பி சி ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வது என அனைத்து விடயங்களிலும் பாரிய சவால் உள்ளது. இவ்வாறு பதிவுகள் இன்றி வாழ்பவர்களை நாம் இனம்காண முடியாது. இது ஒரு பாரிய சுகாதார பிரச்சனை. இங்கு கர்ப்பவதிகள் உள்ளார்கள் சிறுவர்கள் உள்ளார்கள் உரிய சுகாதார வசதிகள் இல்லை பதிவுகள் இல்லை இது எமக்கு ஒரு பாரிய சவால். இவ்வாறு எப்படி அனுமதிக்கப்பட்டுள்ளனர் என எமக்கு பாரிய சிக்கல் உள்ளது.
இதனை விட மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில் இந்த பகுதியில் இருந்து கடந்த 28 ஆம் திகதி 30 பேர் பேருந்து ஒன்றின் ஊடாக முடக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தில் உள்ள அவர்களின் ஊருக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் மீண்டும் இந்த இடத்திற்கு வர அனுமதிக்கப்பட கூடாது என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்வதுடன் நாயாற்று பகுதியில் வந்து இருக்கும் மக்கள் தொடர்பில் எந்தவித பதிவுகளும் எவரிடமும் இல்லாத நிலை காணப்படுகின்ற நிலையில் முல்லைத்தீவிற்கு ஆபத்தான நிலையினை ஏற்படுத்தாதவாறு அதிகாரிகள் செயற்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பாரதூரமான நிலையில் கொவிட் தடுப்பு செயலணிக்கு குறித்த பகுதியினை மறு அறிவித்தல் வரை முடக்குமாறு தம்மால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.உமாசங்கர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேள குறித்த பகுதியில் கடற்தொழிலுக்காக யார்,எவர்,எத்தனை பேர் வந்து நிக்கின்றார்கள் என்ற விபரங்கள் எதுவும் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திடமும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.
புத்தளம்,வெண்ணப்புவ,கறுக்குப்பனை,போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களால் இவ்வாறு யாரிடமும் பதிவில்லாது இங்கு தங்க எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதனால் முல்லைத்தீவின் கரையோர பகுதிக்கு மாத்திரமின்றி மாவட்டத்துக்கே பாரிய ஆபத்து உருவாக்கி உள்ளது குறித்த நபர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடமாடியுள்ளனர் இதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு யார் பொறுப்பு எனவும் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் இன்று சுகாதார துறையே சிக்கலுக்குள்ளாகியுள்ளது இதற்க்கு அனைவரும் பொறுப்புக்கூறவேண்டும் என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.



