மனிதாபிமானமற்ற வகையில் நடத்தப்படுகின்றனரா கொவிட் நோயாளிகள்? முறையிட விசேட இலக்கங்கள் அறிவிப்பு
கொரோனா தொற்று என இனம் காணப்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தவறாக நடத்தப்பட்டால் அது குறித்து முறைப்பாடு செய்யலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நோயாளிகளின் கரிசனைகளிற்கு தீர்வு காண்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சில மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளை உரிய முறையில் நடத்துவதில்லை என்பதை சுகாதார அமைச்சு அறிந்துள்ளது, சில மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லை என்பதையும் அறிந்துள்ளோம். இந்த விடயங்களுக்கு தீர்வை காண்பதற்கான அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ சேவைகள் பணிப்பாளரின் கீழ் இரண்டு அதிகாரிகள் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான கிகிச்சை நிலையங்களின் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொவிட் நோயாளர்கள் வைத்தியசாலையில் எதிர்கொள்ளும் கவலைகள் மற்றும் முறைகேடுகள் குறித்து முறையிட பல ஹொட்லைன் இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி 1999, 011 7 966 366 மற்றும் 0710 107 107 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு நோயாளர்கள் முறையிட முடியும்.
முறைப்பாடுகள் செய்யப்பட்டால் குறைபாடுகளை திருத்துவதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.