சசீந்திரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: பிரதிவாதிகளின் ஆட்சேபணைகளை நிராகரித்த நீதிமன்றம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச உட்பட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச உ;ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி பிரதிவாதிகள் எழுப்பிய ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்த்துள்ளது.
அதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன, சம்பந்தப்பட்ட வழக்கை ஏற்கனவே உள்ள குற்றச்சாட்டுகளின் கீழ் தொடருமாறு உத்தரவிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட 'அரகலய' வன்முறைகளின் போது, செவனகல கிரிஇப்பன்பெவ பகுதியில் உள்ள மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த கட்டடம் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்தன.
இழப்பீடாகப் பெறப்பட்ட பொதுப்பணம்
இந்தச் சொத்துக்கான இழப்பீட்டுக் கோரிக்கை அதிகாரப்பூர்வமாக நிராகரிக்கப்பட்டிருந்த போதிலும், பிரதிவாதிகள் தங்களது அதிகார செல்வாக்கைப் பயன்படுத்தி, இழப்பீட்டு அலுவலக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, 8.85 மில்லியன் ரூபா (88 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா) பொதுப்பணத்தை இழப்பீடாகப் பெற்றுக்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த முறேகடு 2023 நவம்பர் முதல் 2024 மே வரையான காலப்பகுதியில் நடந்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்த்துள்ளது.
புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கி தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசிந்திர ராஜபக்சவுடன் சேர்த்து, இழப்பீட்டு அலுவலகத்தின் முன்னாள் பணிப்பாளர் சேபாலிகா சமன் குமாரி மற்றும் மகாவலி அதிகார சபையின் முன்னாள் பொதுப்பணிப்பாளர் கீர்த்தி பண்டார கொட்டகம ஆகிய மூவரும் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த ஊழல் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்காக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் 30 சாட்சிகளும், 38 ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கு மீதான விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |