தாமரைக் கோபுரத்தின் மொத்த செலவு - வெளிச்சத்திற்கு வந்த விபரங்கள்
கொழும்பு தாமரை கோபுரத்திற்காக 16 பில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் சிறிலங்கா தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பகிர்ந்து கொண்ட தகவலைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய திட்டத்தின் செலவு விபரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் சிறிலங்கா விடுத்த கோரிக்கையின் கீழ் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தகவல்களை வழங்கியுள்ளது.
தாமரைக் கோபுரத்தின் மொத்த செலவு
2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலத்திற்குரிய தாமரைக் கோபுரத்தின் மொத்த செலவு தொடர்பான தகவல்களை ஆணைக்குழுவிடம் இருந்து ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் சிறிலங்கா பெற்றுக்கொண்டுள்ளது.
இதன்பிரகாரம் 11.36 கோடி அமெரிக்க டொலர்கள் கட்டுமான செலவுகளுக்காக செலவிடப்பட்டுள்ளது.
33.74 கோடி ரூபா ஆலோசனைக் கட்டணமாகவும் 22.23 கோடி ரூபா கடன் பொறுப்பு மற்றும் முகாமைத்துவ கட்டணமாகவும் செலவிடப்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் சிறிலங்கா தெரிவித்துள்ளது.