திலீபன் நினைவூர்தியுடன் அனைவரும் திரண்டிருந்தால் காடையர்கள் தாக்கியிருக்க முடியுமா....
தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்தி திருகோணமலையில் வைத்து தாக்கப்பட்ட செய்தி ஈழத் தமிழ் மக்களின் மனங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர்கள் மீதே இத்தகைய வன்மத்தோடு தாக்குபவர்கள் உயிரோடு இருப்பவர்களை என்ன செய்வார்கள் என்கிற சிந்தனையை, அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம், நினைவேந்தல் உரிமை தொடர்பில் ஈழத் தமிழ் மக்களுக்கு இலங்கையில் உள்ள உண்மை நிலவரத்தையும் இந்த உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது.
உன்னத போராளி
1987ஆம் ஆண்டு இந்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு உயிரை ஈகம் செய்தவர் திலீபன். 15.09.1987ஆம் நாளன்று தியாக தீபம் திலீபன் அவர்கள் யாழ்ப்பாணம் நல்லூரில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
பன்னிரு நாட்கள் துளி நீரும் அருந்தாமல், ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தியாக தீபம் திலீபன் அவர்கள் உண்ணா நோன்பிருந்தார். அகிம்சையால் விடுதலை பெற்ற தேசம் எனப் பெயர் எடுத்த பாரத தேசத்தின் பாரா முகத்தினால் 26.09.1987அன்று தியாக தீபம் திலீபன் அவர்கள் தனது இன்னுயிரை ஈகம் செய்தார். தமிழர் தேசம் சோகத்தில் மூழ்கியது.
23வயதில் தீர்க்கதரிசனமும் நெஞசுறுதியும் மிக்க போராளியாகத் திகழ்ந்த தியாக தீபம் திலீபன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் கடமையாற்றினார்.
தனது எழுச்சியும் ஆழமும் கொண்ட கருத்துக்களினாலும் அணுகுமுறைகளினாலும் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் உன்னதமான போராளியாக திலீபன் அவர்கள் மதிக்கப்பட்டார்.
ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்கும் பாதுகாப்புக்குமாக அவர் அறவழிப் போராட்டத்தை தேர்ந்தெடுத்து அதில் மிக நெஞ்சுறுதியுடன் தன்னை அர்ப்பணித்த விதம் ஈழ மக்கள் மத்தியில் திலீபனை வரலாறு கடந்து காலம் கடந்து நேசிக்கப்படும் உன்னத போராளியாக்கியது.
ஈழவிடுதலைப் பண்பாடு
ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் மாவீரர்களை நினைவுகூர்வது என்பது மக்கள் பண்பாடு ஆகிவிட்டது. தமது உரிமைக்காக உயிர்களை ஆகுதியாக்கிய ஈழ விடுதலைப் போராளிகளை நினைவுகூர்வது என்பது ஈழத் தமிழர்களின் தேசிய கடமையாகவும் பண்பாடாகவும் நிலைபெற்றுவிட்டது.
இந்த நிலையில் புரட்டாதி மாத்தில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் தமிழர் தேசத்தின் வீடுகள் தொடங்கி, பாடசாலைகள், பல்கலைக்கழகம், நிறுவனங்கள், பொதுஇடங்கள், விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட இடங்கள், நினைவுத்தூபிகள் போன்ற இடங்களில் நினைவேந்தல் இடம்பெறுவது வழக்காகும்.
2009இற்குப் பிந்தைய காலத்தில் ஈழத் தமிழ் மக்கள் வாழ்வதற்கு போராடுவதைப் போல நினைவேந்தல் உரிமைக்காகவும் போராடி வருகின்றனர். சிங்கள தேசம் போர் வெற்றியை நினைவுகூர பாரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றது. போரில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினருக்கு மதிப்பும் ஊக்குவிப்பும் பதவி உயர்களும் வழங்கப்படுகின்றது.
ஆனால் அதே இராணுவத்தால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அத்துடன் போரில் மாண்டுபோன ஈழத் தமிழ் மக்களின் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தவும் உரிமை மறுக்கப்படுகிறது.
காவலுடன் தாக்குதல்
இந்த நிலையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுகளை சுமந்த நினைவு ஊர்தி ஒன்று, பொத்துவில் தொடக்கம் நல்லூர் வரையான பயணத்தை மேற்கொண்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் ஊர்தி தமிழர் தாயகத்தை வலம் வந்தது.
இந்த நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் சேனையூர் மற்றும் தம்பலகாமம் பகுதிகளின் ஊடாக பயணித்த நிலையில், சர்தாபுரம் பகுதியில் பயணத்தை மேற்கொண்ட நிலையில், சிங்கள காடையர்களால் குறித்த நினைவேந்தல் ஊர்தி தாக்கப்பட்டதுடன், அவ் ஊர்தியில் பயணம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி உறுப்பினர் சட்டத்தரணி காண்டீபனும் தாக்கப்பட்டுள்ளனர்.
தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்தை தாக்கி சேதப்படுத்திய காட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடாத்திய காட்சிகளும் ஊடகங்களில் காணொளியாக வெளியாகியுள்ளது.
சிங்கக் கொடியை ஏந்தியபடி வந்த சிலர் இவ்வாறு தாக்குதல் நடாத்திய அதேவேளை, அங்கு நின்ற போக்குவரத்து காவல்துறையினர் தாக்குதலை தடுக்கும் விதமாக நடந்துகொள்ளாத நிலையையும் உணரக்கூடியதாக உள்ளது.
இதேவேளை இராணுவம் மற்றும் காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாட்டுடன்தான் தம்மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழரின் நிலை இதுவா?
மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்மீது வீதியில் துரத்தித் துரத்தி தாக்குதல் நடாத்துவதுதான் இலங்கையில் ஜனநாயகத்திற்கு உள்ள மதிப்பா? அல்லது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்றால் காடையர்களால் இப்படி தாக்குதல் நடாத்த முடியுமா?
சிங்களவர்களுக்கு ஒரு மதிப்பு, தமிழர்களுக்கு இப்படி அவமதிப்பு என்று காலம் காலமாக இலங்கையில் தொடர்கின்ற பாரபட்சம்தான் இங்கும் வெளிப்பட்டு நிற்பதைக் காணுகிறோம். அத்துடன் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் சாதாரண ஈழத் தமிழ் மக்களின் நிலை எப்படி இருக்கும் என்பதையும் நாம் இதில் உணரலாம்.
தமிழ் மக்கள் தமது உறவுகளை, தமது மாவீரர்களை தமது தாயகத்தில் நினைவுகூர்கின்ற உரித்தைக் கொண்டவர்கள். அதனை யாரும் தரவேண்டியதில்லை. யாரிடமும் அதற்காக மண்டியிட வேண்டியதுமில்லை.
கடந்த காலத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஸ்டிக்க பல்வேறு தடைகள், அச்சுறுத்தல்களின் மத்தியில் தமிழர் தாயகம் திரண்டதை இலங்கை அரசும் பேரினவாதிகளும் கண்டிருப்பர்.
ஈழத்தில் தமிழ் மக்கள் உள்ளவரையில் சிங்களப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறை இனவழிப்புக்கு எதிராக போராடிய மாவீரர்களின் நினைவுகள் அனுஷ்டிக்கப்படும் என்ற யதார்த்த நிலையை அரசு உணர வேண்டும்.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற பொன்மொழியை ஈழ தேசத்தில் பதிந்தவர் தியாக தீபம் திலீபன் அவர்கள். உண்மையில் அன்றைய தினம், திலீபன் நினைவேந்தல் ஊர்திமீது பேரினவாத காடையர்கள் நடாத்திய தாக்குதல் வடக்கு கிழக்கு மக்களின் மனங்களில் பெருநெருப்பைக் கொழுத்தியது.
அகிம்சை முகமாய் அகிம்சைக் குரலாய் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபன் அவர்கள்மீது வன்முறையைப் பிரயோகித்த காடையர்களின் அணுமுகுமுறையை, மனிநிலையை என்னவென்பது? இவர்களால் திலீபனின் போராட்டக் குரலையும் அவரின் வழிமுறையையும் உணரத்தான் முடியுமா?
ஆனால் மக்கள் புரட்சியை ஏற்படுத்தும் மகோன்னதமான போராளி திலீபன் என்பதை இன்றும் உணர்கிறோம். உண்மையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலில் மாத்திரம்தான் இத்தகைய தடைகளை காடையர்கள் நிகழ்த்துகின்றனரா? இல்லையே.
குருந்தூர் மலையில் பொங்கல் செய்யச் சென்ற வேளையிலும் இதேபோன்ற காடையர்கள்தானே தடுப்புக்களை ஏற்படுத்தினர். கால்களால் அடுப்பை மிதித்து அணைத்தார்கள். இத்தகைய காடையர்களை சிறிலங்கா அரசு இன்னமும் அனுமதித்துக்கொண்டு தானே இருக்கிறது.
இலங்கை அரசின் தொல்லியல் திணைக்களமும் காடையர்களாகத் தானே தமிழர் மண்ணில் இத்தகைய அடாவடிகளை செய்கிறது? அன்று, திருகோணமலையில் வெறுமனே கஜேந்திரன் அவர்களும் காண்டீபனும் இன்னும் சிலரும் சென்றமையால்தான் காடையர்கள் இத்தகைய தாக்குதல்களை நடாத்தியுள்ளார்கள்.
அந்த இடத்தில் பெருந்திரளான மக்கள் சென்றிருந்தால் இப்படி காடையர்கள் தாக்குதல் நடாத்தியிருப்பார்களா? அல்லது அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் திலீபன் நினைவேந்தல் ஊர்தியுடன் அன்று சென்றிருந்தால் இப்படி தாக்குதல் நடாத்தியிருக்க முடியுமா?
மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மக்கள் புரட்சி வெடிக்கும் ஒரு நினைவேந்தலை செய்ய வேண்டும் என்பதைத்தான் இதன் ஊடாகவும் தியாக தீபம் திலீபன் அவர்கள் வலியுறுத்தி நிற்கிறார்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 21 September, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.