கொழும்பில் பதற்றம்! ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் (காணொளி)
புதிய இணைப்பு
கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் தற்போது முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்வதற்காக டெக்னிக்கல் சந்திக்கு பெருந்திரளானோர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சீரற்ற காலநிலை காரணமாக ஆர்ப்பாட்ட பேரணியானது இதுவரையில் ஆரம்பமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் இன்றைய தினம் (20.02.2023) போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், வீதியில் பயணிக்கும் மக்களுக்கு அல்லது பொதுச் சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் அல்லது இடையூறுகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
''அரசியலமைப்பின் பிரகாரம் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தில் காவல்துறை ஒருபோதும் தலையிட மாட்டார்கள்.



ஆனால் சிலர் தற்போதுள்ள சட்டத்திற்கு எதிராக செயற்படுகிறார்கள். குறிப்பாக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம் என்று கூறுகிறோம்.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அது தொடர்பில் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.''என தெரிவித்தார்.
இரண்டாம் இணைப்பு
கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் இன்றைய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியினர் தெரிவித்துள்ளனர்.
"போராட்டத்தை கைவிடுமாறு எமக்கு அறிவுறுத்தப்படவில்லை மற்றும் தடை உத்தரவு எதையும் நாங்கள் காணவில்லை.
எனவே, நாங்கள் போராட்டத்தை முன்னெடுப்போம் " என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு

இன்று (20) பிற்பகல் கொழும்பில் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோட்டை காவல் நிலையத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் அதன் 7 அமைப்பாளர்கள் மற்றும் போராட்டத்தில் பங்குபற்றுபவர்கள் இன்று மாலை மற்றும் 7 மணி வரை அதிபர் அலுவலகம், அதிபர் மாளிகை, நிதியமைச்சு, கறுவாத்தோட்டம் மற்றும் அதற்கு இடைப்பட்ட பல வீதிகளுக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறும் உரிய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா