இலங்கையருக்கு மகிழ்ச்சியான செய்தி -தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வருகிறது கொரோனா தடுப்பூசி
எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் கொவிட் 19 வைரஸிற்கான முதலாவது தடுப்பூசியை இலங்கையருக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த தடுப்பூசியை பெப்ரவரி இறுதிக்குள் அல்லது மார்ச் முதல் வாரத்தில் பெறலாம் என்று கூறிய வீரதுங்க, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் மக்களுக்கு இதை நிச்சயமாக வழங்க முடியும் என்றார்.
அத்துடன் தடுப்பூசி விநியோகிக்கப்படும் நடைமுறை ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஆலோசனையின்படி, ஆரம்பத்தில் தடுப்பூசி சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும், இவர்கள் தற்போது 155,000 பேராக உள்ளனர்.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் படி, இது முப்படை மற்றும் காவல்துறையின் முன் வரிசை பணியாளர்களுக்கு அடுத்ததாக வழங்கப்படும், இதில் 127,500 பேர் உள்ளனர்.
இது தொடர்பாக திறைசேரி போதுமான நிதி திரட்டியுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய வீரதுங்க, தடுப்பூசிக்கான நிதி ஏற்பாடுகள் ஏற்கனவே முடிந்துவிட்டன என்றார்.