அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 121,000 பேர் : அநுர அறிவிப்பு
இலங்கையில் இந்த ஆண்டு நிறைவடையும்போது 121,000 பேர் அரச சேவைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்படுவர் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தறை, அக்குரஸ்ஸவில் நேற்று (20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பல ஆண்டுகளாக அரச சேவைக்குப் புதிய பணியாளர்கள் எவரும் இணைத்துக்கொள்ளப்படவில்லை. எனினும், எமது அரசாங்கம் தன்னிச்சையாக ஆட்களைச் சேர்ப்பதில்லை.
ஆசிரியர் சேவையில் இணைக்கப்படவுள்ள 23,000 பேர்
இது தொடர்பில் ஆராயப் பிரதமர் தலைமையில் விசேட குழு ஒன்றை நியமித்து, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தேவையான உண்மையான ஆளணிப் பற்றாக்குறையை முறையாகக் கண்டறிந்துள்ளோம்.

இதற்கமைய, இந்த வருடம் இறுதியில் காவல்துறையில் 10,000 பேரும், ஆசிரியர் சேவைக்கு 23,000 பேரும் அடங்கலாக ஒட்டுமொத்தமாக 121,000 பேர் அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இந்த ஆட்சேர்ப்பு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.
கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதன் ஊடாக அவர்களது பொருளாதாரத்துக்கு வலுச்சேர்க்கப்படும்” என ஜனாதிபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |