சிறப்பு பிரதிநிதியாக பைசர் முஸ்தபா! அனோஜன் விவகாரத்தில் வலுக்கும் கோரிக்கை
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவசரமான இராஜதந்திர தலையீடு மேற்கொள்ளப்பட வேண்டிய சூழ்நிலை குறித்து கருத்துக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில், சவுதி அரேபியா மற்றும் பிராந்திய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகள் தொடர்பில் அனுபவம் கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவை விசேட பிரதிநிதியாக இதில் ஈடுபடுத்துவது தொடர்பான யோசனையும் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த யோசனைக்கு பின்னணியாக, கடந்த காலத்தில் மாலைதீவில் இடம்பெற்ற இலங்கையரான லஹிரு மதுஷங்க தொடர்பான சம்பவம் சுட்டிக்காட்டப்படுகிறது.
மாலைதீவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்
2018ஆம் ஆண்டு மாலைதீவில் கைது செய்யப்பட்ட லஹிரு மதுஷங்க, சுமார் மூன்று ஆண்டுகளுக்கு அண்மித்த காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அப்போதைய மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீனை கொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் தொடர்புடைய துப்பாக்கிச் சுடும் நபர் என லஹிரு மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
எனினும், அவரது குடும்பத்தினரும் சட்டத்தரணியும் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தனர்.
அத்துடன், லஹிருவுக்கு நியாயமான விசாரணை வழங்கப்படவில்லை என்றும், அவர் தடுப்புக்காவலில் இருந்தபோது துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் Amnesty International குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது.
அந்த காலகட்டத்தில் இலங்கையின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பதவி வகித்த பைசர் முஸ்தபா, மாலைதீவில் வைத்து லஹிரு மதுஷங்கவை சந்தித்திருந்தார்.
மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக இப்ராஹிம் மொஹமட் சோலி பதவியேற்ற நிகழ்வில் பங்கேற்பதற்காக பைசர் முஸ்தபா அந்நாட்டில் இருந்த காலப்பகுதியிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் 2018 நவம்பர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் லஹிரு மதுஷங்கவுக்கு எதிரான வழக்கை மாலைதீவு குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அவரை விடுதலை செய்தது.
மரண தண்டனையை எதிர்நோக்கும் அனோஜன்
இந்த முன்னுதாரணத்தை கருத்திற்கொண்டு, தற்போது சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கும் அனோஜன் சிவராசாவுக்காகவும் பைசர் முஸ்தபா போன்ற அனுபவம் வாய்ந்த ஒருவரை விசேட பிரதிநிதியாக ஈடுபடுத்த முடியுமா என்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, சட்ட ரீதியான மேன்முறையீட்டு நடவடிக்கைகளுடன், மனிதாபிமான மற்றும் இராஜதந்திர ரீதியான தலையீடுகளையும் மேற்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய வேண்டும் என கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அனோஜன் சிவராசா தொடர்பிலும் பைசர் முஸ்தபா கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் முன்வைத்துள்ள விடயங்களின் அடிப்படையில், சவுதி அரேபிய சட்டத்திற்கு மதிப்பளித்து, அரச மன்னிப்பைப் பெற்றுக்கொள்வதற்கான இராஜதந்திர வழிமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அனோஜன் சிவராசாவின் உயிரைக் காப்பாற்றுவதற்கு கிடைக்கக்கூடிய கால அவகாசம் மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக சாத்தியமான அனைத்து மனிதாபிமான மற்றும் இராஜதந்திர வழிமுறைகளையும் அரசாங்கம் அவசரமாக ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சவுதி அரேபிய அதிகாரிகளுடனான இலங்கையின் இராஜதந்திர உறவுகளை பயன்படுத்தி, அனோஜன் சிவராசாவின் வழக்கு தொடர்பில் சாத்தியமான அனைத்து சட்ட மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |