உங்களின் தாளத்திற்கு ஆட முடியாது - சீனாவுக்கு காரசாரமான பதில்
சீனாவின் குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டுவதற்கான இடம் இலங்கையல்ல எனவும், இங்குள்ள மக்களை விசித்திரமான விலங்குகள் என்றே சீனத்தூதுவர் கருதுவதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath fonseka) தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“மிகவும் துரதிர்ஷ்டமான ஒரு விடயம் இன்று, விவசாயிகள், விவசாய நிலத்தில் அல்ல வீதியில் நிற்கின்றார்கள். அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சீனாவின் குப்பைகளை ஏற்றிய கப்பல் ஒன்று இன்று இலங்கையை சுற்றிக்கொண்டிருக்கின்றது. சீன மக்களின் குப்பைகளைக் கொட்டுவதற்கான இடம் இலங்கை அல்ல. சீனா எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்களின் தாளத்திற்கு எம்மால் ஆட முடியாது. அரசாங்கமும் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த நாட்டின் கௌரவத்தை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். இது இறையாண்மை உள்ள ஒரு நாடு. இவற்றை பாதுகாக்கும் வகையில் வெளிநாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டும்.
சீன அரசாங்கம் இந்த விடயத்தில் மிகவும் வெட்கக்கேடான முறையில் செயற்படுகின்றது. இலங்கையில் விசித்திரமான ஒரு விலங்கு இனம் வாழ்வதாகவே சீனத் தூதுவர் நினைத்துக்கொண்டுள்ளார்.
இந்த நாட்டிற்கு பாதிப்பான எந்த விடயத்திற்கும் நாம் இடமளிக்கப்போவது இல்லை. ஆகவே அவரது குப்பையுடனான கப்பலை அவரது நாட்டிற்கே கொண்டு சென்று எங்கேயாவது இறக்கிக்கொள்ளுமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்” என்றார்.