ஒரே நேரத்தில் குறிவைக்கப்பட்ட ரஷ்யா - உக்ரைன்: நடத்தப்பட்ட பாரிய சைபர் தாக்குதல்கள்
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் உத்தியோகபூர்வ அவசரகால மற்றும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை செயலிகள் (Emergency & Air Raid Alert Apps) மீது ஒரே நேரத்தில் கடுமையான சைபர் தாக்குதல்கள் (Cyber-attacks) நடத்தப்பட்டுள்ளன.
இச்சைபர் ஊடுருவல்கள் காரணமாக இரு நாட்டுப் பொதுமக்களின் தொலைபேசிகளுக்கும் போலி மற்றும் அச்சுறுத்தல் நிறைந்த அவசரகால எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
உக்ரைன் வான்படையின் தகவல்படி, உக்ரைனிய மக்கள் பரவலாகப் பயன்படுத்தும் ஏர் அலர்ட் (Air Alert) செயலி எதிரிகளால் ஊடுருவப்பட்டு, கீவ் (Kyiv) உட்படப் பல பிராந்தியங்களில் அணுக்கதிர்வீச்சு அச்சுறுத்தல் (Radiation Threat), இரசாயனத் தாக்குதல் மற்றும் தெருப் போர் அச்சுறுத்தல்கள் நிலவுவதாகப் போலி அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
உக்ரைனிய வான்படை
இச்சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்களை அமைதி காத்திருக்குமாறு கேட்டுக்கொண்ட உக்ரைனிய வான்படை, நாட்டில் எவ்வித அணுக்கதிர்வீச்சு அச்சுறுத்தலும் இல்லை என்றும் அதிகாரப்பூர்வ டெலிகிராம் (Telegram) சேனல்கள் மூலமாக மட்டுமே எச்சரிக்கைகளைச் சரிபார்க்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
உக்ரைனியச் செயலி மீதான தாக்குதல் இடம்பெற்று சில மணிநேரங்களில், ரஷ்ய அவசரகால அமைச்சகத்தின் (Ministry of Emergencies) அதிகாரப்பூர்வ செயலியும் பாரிய சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக மாஸ்கோ அறிவித்துள்ளது.

இத் தாக்குதல் காரணமாகப் ஊடுருவல்காரர்கள் ரஷ்ய மக்களுக்குப் போலித் தகவல்களையும் எச்சரிக்கைகளையும் அனுப்ப முடிந்தது என்றும் இருப்பினும் நாட்டின் ஏனைய பிரதான அவசரகால எச்சரிக்கைக் கட்டமைப்புகள் வழமை போல் இயங்குவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைனின் வான்வழி எச்சரிக்கைச் செயலி மீது இடம்பெற்ற தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம் என கீவ் குற்றம் சாட்டியுள்ளது.
அதேவேளையில், கெர்சன் (Kherson) பிராந்தியத்தில் நிலவிய தற்காலிகப் போர்நிறுத்தம் நிறைவடைந்த சில நிமிடங்களிலேயே இரு நாடுகளின் அவசர எச்சரிக்கை அமைப்புகளும் இவ்வாறான இலக்கு வைக்கப்பட்ட டிஜிட்டல் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |