உத்தேச இணையத்தள பாதுகாப்பு சட்டமூலம் : மக்களின் கருத்து சுதந்திரத்தைப் பாதிக்கும்
இலங்கை அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ள உத்தேச இணையத்தள பாதுகாப்பு சட்டமூலம் தற்போது உள்ள வடிவத்திலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டால் மக்களின் வெளிப்படையான கருத்து சுதந்திரத்தை நசுக்குவதற்கு வழிவகுக்கும் என சர்வதேச நீதித்துறை வல்லுநர்களின் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தமக்கு கவலையளிப்பதாக அந்த ஆணைக்குழுவின் சட்டம் மற்றும் கொள்கைப் பணிப்பாளர் சீடர்மேன் தெரிவித்துள்ளார்.
ஆழமான குறைபாடுகள்
குறித்த சட்டமூலத்தில் உள்ள பல விதிகள் தகவல் அறியும் உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை மனித உரிமை சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உள்ளாக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த சட்டமூலம் அதன் வடிவமைப்பில் ஆழமான குறைபாடுகளை கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் கொள்கைகள் தொடர்பான பொது விவாதத்தை அடக்குவதற்காக குறித்த சட்டம் பயன்படுத்தக் கூடிய அச்சம் நிலவுவதாகவும் சர்வதேச நீதித்துறை வல்லுநர்களின் ஆணைக்குழுவின் சட்டம் மற்றும் கொள்கை பணிப்பாளர் சீடர்மேன் மேலும் தெரிவித்துள்ளார்.