கைதிகளை பராமரிப்பதற்கான நாளாந்த செலவு குறித்து சிரேஷ்ட அதிகாரி வெளியிட்டுள்ள தகவல்
“யுக்திய” நடவடிக்கையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கைதிகளை பராமரிக்கும் நாளாந்த செலவு ஐந்து கோடி ரூபாவை எட்டியுள்ளதாக சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
“நாடு முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கப்படக் கூடிய கைதிகளின் எண்ணிக்கை பதினோராயிரமாக இருந்தாலும், தற்போது சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை முப்பதாயிரத்தைத் தாண்டியுள்ளது.
பராமரிப்பு செலவு
நீதி நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், நாட்டின் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் மற்றும் சந்தேக நபர்களை பராமரிப்பதற்காக நாளாந்தம் சுமார் ஒன்றரை மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.
இது தொடர்பில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடம் வினவிய போது, சந்தேகநபர் ஒருவரை சிறையில் பராமரிக்க நாளொன்றுக்கு சுமார் ஆயிரத்து ஐநூறு ரூபா செலவாகும் என்றார்.
வெகு விரைவில் தீர்வுகள்
போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்த “யுக்திய” நடவடிக்கையின் மூலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மற்றும் ஏனைய கைதிகளை பராமரித்தல் மற்றும் தடுத்து வைப்பது சவாலானது, ஆனால் அதற்கான தீர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.” என வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |