காவல்துறையினரின் விசேட தேடுதல் : மேலும் 1400 பேர் கைது
நாடளாவிய ரீதியில் மீண்டும் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளனர்.
மூன்று நாள் இடைவெளிக்குப் பின்னர் நேற்று (27) மீள ஆரம்பிக்கப்பட்ட யுக்திய தேடுதல் நடவடிக்கையில் 24 மணிநேரத்தில் 1,422 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஊடகப் பிரிவின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்டவர்களில் 35 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
விசாரணைகள் ஆரம்பித்துள்ளன
மேலும், சட்டவிரோத சொத்துக்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இது தவிரவும், போதைக்கு அடிமையான 37 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 73 சந்தேகநபர்களும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவர்களிடம் இருந்து 447 கிராம் ஹெரோயின், 827 கிராம் ஐஸ் போதைப்பொருள், 5 கிலோ கஞ்சா மற்றும் 3,574 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
13,800 சோதனைகள்
கடந்த 17ஆம் திகதி ஆரம்பமான இந்த விசேட நடவடிக்கையில் 17ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை சுமார் 13,800 சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அதில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் இன்னும் தொடரும் எனவும் அவர்கள் தெரியப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |