மீள ஆரம்பமான யுக்திய சுற்றிவளைப்பு : காவல்துறை அறிவிப்பு
நாட்டில் இடம்பெரும் போதைப்பொருள் விற்பனை மற்றும் அது சார்ந்த குற்றங்களை தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட விசேட யுக்திய தேடுதல் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அதன்படி, இன்றைய தினம் (27) இந்த தேடுதல் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாக அவர் அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவித்ததாவது,
ஏராளமான குற்றச்செயல்கள்
நாட்டில் பூதாகரமாக அதிகரித்து வரும் மிகப்பெரிய பிரச்சினையாக போதைப்பொருள் பாவனை மாறியுள்ளது.
இதனால் பெரியோர்கள், இளையோர்கள் முதல் பாடசாலை மாணவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்.
இதன் பின்னணியில் ஏராளமான குற்றச்செயல்களும், சமூக சீர்கேடுகளும் அதிகரித்தது நாட்டின் அமைதி சீர்குலையும் சூழல் உருவாகியுள்ளது.
இதனை ஒழிப்பதை நோக்காகக் கொண்டு காவல்துறையினால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையாக யுக்திய விளங்குகிறது.
ஏராளமானோர் கைது
இந்த விசேட நடவடிக்கையில் ஏராளமானோர் கைது செய்யப்பட்ட நிலையில், பண்டிகைக் கால விசேட கடமைகளுக்காக காவல்துறை உத்தியோகத்தர்களை ஈடுபடுத்திய காரணத்தினால் தேடுதல் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த 03 நாட்கள் இடைவேளையின் பின்னர் போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்கான யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (27) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது." என அவர் தெரிவித்தார்.
கடந்த 25ஆம் திகதி வரை போதைப்பொருளுடன் தொடர்புடைய 13,666 பேர் “யுக்திய” நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 1,097 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |