ஹிசாலினியின் மரணம்- கொழும்பிலிருந்து டயகம தோட்டத்திற்கு விரைந்த விசேட பொலிஸ் குழு!
டயகம சிறுமி ஹிசாலினியின் மரணம் தொடர்பில் கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழுவினர் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
கொழும்பு கொட்டாவ பெண்கள் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி வருனி போகாவத்தை தலைமையிலான பொலிஸ் குழுவினரே டயகம தோட்டத்திற்கு சென்றிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணி புரிந்த டயகம பகுதியை சேர்ந்த சிறுமி ஹிசாலினி கடந்த 15 ஆம் திகதி தீக்காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்தார்.
இதனையடுத்து நாடளாவிய ரீதியில் சிறுமியின் மரணத்திற்கு முறையான விசாரணை கோரியும் குற்றவாளியை அடையாளம் கண்டு தண்டனை வழங்க வேண்டும் எனவும் பல்வேறு ஆர்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
டயகம தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ள சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உதரவிட்டுள்ள நிலையில் குறித்த சிறுமி புதைக்கப்பட்ட மயான பகுதி பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கொழும்பிலிருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினர் சிறுமியின் தாய் மற்றும் உறவினர்களை மீண்டும் விசாணைக்குட்படுத்தியதோடு சிறுமியை வேலைக்கு அழைத்துச்சென்ற தரகர் மற்றும் அவரது உறவினர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டனர்.










