தயாசிறி ஜயசேகரவின் பதவி நீக்கல் விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு கட்சி எடுத்த தீர்மானத்தை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மறுத்துள்ளது.
அத்துடன், தயாசிறி ஜயசேகர வகித்து வந்த கட்சியின் செயலாளர் நாயகமாக செயற்படுவதற்கு நியமிக்கப்பட்ட சரத் ஏக்கநாயக்கவுக்கு எதிராகவும் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் தலைவர் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன கட்சியின் அரசியலமைப்புக்கு முரணான வகையில் தனது கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியமைக்கு எதிராக தயாசிறி ஜயசேகர சமர்ப்பித்த முறைப்பாட்டின் ஆரம்பக்கட்ட பரிசீலனைக்கு அமைய கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதானகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இடைநிறுத்திய கடிதங்களை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்பது தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
குறித்த கடிதம் தொடர்பான தீர்ப்பானது இன்று(08) வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர புதன்கிழமை (06) அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டதுடன் கட்சியின் உறுப்புரிமையும் பறிக்கப்பட்டதுடன், ஜயசேகரவுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையை கட்சியின் அரசியலமைப்பு விதிகளின்படி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்படமைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் மனு தாக்கல் செய்துள்ளார்.
தீர்ப்பு
இந்நிலையில் தயாசிறி ஜயசேகர தாக்கல் செய்துள்ள மனுவை அடிப்படையாக கொண்டு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் பதவி நீக்கம் தொடர்பான கவலைகளை தெரிவித்த கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன, பல காரணங்களினால் கட்சியின் உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரைத் தவிர, தயாசிறி ஜயசேகரவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கட்சி உறுப்பினராகவோ அல்லது அந்த பகுதிக்குள் அவர் வைத்திருக்க விரும்பும் வேறு எந்தப் பதவியையும் ஏற்றுக்கொள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி தயாராக இருப்பதாகவும் முன்னாள் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.