தடுப்புக் காவலில் இருந்த நபர் உயிரிழப்பு - காவல்துறையின் தாக்குதலா காரணம்..! ஆரம்பமானது விசாரணை
தடுப்புக் காவலில் இருந்தபோது கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் முகாமைத்துவ உதவியாளரும் கொல்லப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான ஏ.ஜி.சமந்த ப்ரீத்தி குமார தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளதாக அவரது மனைவியும் மனித உரிமை ஆர்வலர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாளிகாகந்த நீதவானின் உத்தரவிற்கு அமைய பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோனின் அறிக்கைக்கு அமைய உள் இரத்தப்போக்கு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
"அவர் அடித்துக் கொல்லப்பட்டார். என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. மனிதாபிமானமற்ற முறையில், ஆயுதங்களால் தலையில் தாக்கப்பட்டார்.
பிரேதப் பரிசோதனை
கால்கள் மற்றும் கைககளில் தாக்கப்பட்டார். தற்போது பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது. இது கொலை. இது ஒரு தாக்குதலால் ஏற்பட்ட கொலை."
படுகொலை செய்யப்பட்ட சமந்த ப்ரீத்தி குமாரின் மனைவி ஷிராணி தில்ருக்ஷி பிரியதர்ஷனி, தனது கணவருக்கு நீதி கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
இந்த மரணம் தொடர்பில் தடயவியல் வைத்திய அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாகவும், 16.01.2023 அன்று இந்த சம்பவம் தொடர்பான அனைத்து தரப்பினரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதாகவும் ஆணைக்குழுவின் பேச்சாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 11 ஆம் திகதி 19.30 மணிக்கு காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், ஜனவரி 10ஆம் திகதி மாலை 15 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தபோது “இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர்” கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
ஹெரோயின் கடத்தல் தொடர்பில் சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது சந்தேகநபர் வன்முறையில் ஈடுபட்டமையினால் காவல்துறை உத்தியோகத்தர்கள் அவரைக் கட்டுப்படுத்தச் சென்ற போது ஏற்பட்ட சம்பவத்தின் விளைவாக சந்தேகநபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்த அரச ஊழியரை போதைப்பொருள் கடத்தல்காரன் என காரணமே இல்லாமல் அவமானப்படுத்திய ஊடகங்களுக்கு உறவினர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
“போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இவரைக் கொன்றனர். குழந்தைகளையும் மனைவியையும் முழுவதுமாக கொல்வது போன்ற ஒன்றை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. ஏனெனில் அவர் போதைப்பொருள் விற்பனை செய்வதாக தெரண பெரிய விளம்பரம் செய்தது.
போதைப்பொருள் குற்றச்சாட்டு
ஊடகங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டிருக்க வேண்டும். காவல்துறையும் இந்தக் கொலைகாரர்கள் சொல்வதைச் சொல்கிறார்களா?" மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய வருகைத்தந்த கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் செயலாளர் சுதேஷ் நந்திமால் குற்றஞ்சாட்டினார்.
கடந்த சில வருடங்களாக காவல்துறை காவலில் சட்டத்திற்கு புறம்பான கொலைகளை செய்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் பல சந்தர்ப்பங்களில் குற்றஞ்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
