தாய்லாந்து - கம்போடியா இடையே வெடித்த போர் - பழமையான கோவில் காரணமா..!
தாய்லாந்து (Thailand) மற்றும் கம்போடியா இடையே நீண்ட காலமாக நிலவி வந்த எல்லைப் பிரச்சனை தற்போது தீவிரமான மோதலாக வெடித்துள்ளது.
இரு நாடுகளும் 800 கி.மீ., துார எல்லையை பகிர்ந்துள்ளன. தாய்லாந்து, கம்போடியா மற்றும் லாவோஸ் எல்லைகளை ஒட்டி அமைந்துள்ள 2 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு உள்ள பகுதி, 'எமரால்டு முக்கோணம்' என்று அழைக்கப்படுகிறது.
இந்த மோதலுக்கு முக்கிய காரணம், இரு நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள பிரேவிஹார் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிலங்கள் குறித்த உரிமைப் பிரச்சனை தான்.
பல ஆண்டுகளாக சர்ச்சை
1962-ல் சர்வதேச நீதிமன்றம் இக்கோவில் கம்போடியாவுக்குச் சொந்தமானது எனத் தீர்ப்பளித்தது. ஆனால், அதனைச் சுற்றியுள்ள நிலங்கள் குறித்து தெளிவான தீர்ப்பு அளிக்கப்படாததால், இந்த சர்ச்சை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.
இந்த பகுதியில் இரு நாட்டு படையினரும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதலில் கம்போடியா ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், தாய்லாந்து மாகாணமான சுரின் மற்றும் கம்போடியாவின் ஒட்டார் மீன்ச்சே இடையேயான எல்லையில் மோதல்கள் துவங்கின.
இரு நாடுகளின் படைகளும் எல்லைப் பகுதியில் ரொக்கெட் மற்றும் பீரங்கி குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
எல்லைப் பகுதிகளை மூடியுள்ளன
இந்த மோதலில் பொதுமக்கள் உட்பட 32 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இரு நாடுகளும் தங்களது எல்லைப் பகுதிகளை மூடியுள்ளன. மேலும், தாய்லாந்து, எல்லைப் பகுதியில் உள்ள எட்டு மாகாணங்களில் அவசரநிலையை அறிவித்துள்ளது.
சர்வதேச அமைப்புகளும் இந்த மோதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
