பஸில் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானம் எடுப்பார்
பசில் ராஜபக்ஷவை எம்.பியாகவோ அமைச்சராகவோ நியமிப்பது கட்சியின் உள்ளக விடயம். இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதியே இறுதி முடிவு எடுப்பாரென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
பசில் ராஜபக்ஷ எப்பொழுது வருவார் எத்தகைய அமைச்சு பதவி வகிப்பார் என்பதும் முழுமையாக கட்சி உள்ளக விடயமாகும். அது தொடர்பில் முடிவு எடுக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு அறியவரும்.
தற்பொழுது அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. கடந்த காலங்களிலும் அமைச்சுக்களின் முக்கியத்துவத்திற்கமைய நியமனங்கள் நடைபெற்றன.
அதற்கான முறைகளும் உள்ளன.கற்பனையாக சிந்தித்து பதில்வழங்க முடியாது. சில நியமனங்கள் தொடர்பில் விமர்சனம் இருக்கும்.
பசில் ராஜபக்ஷவை எம்.பியாக நியமிப்பது தொடர்பில் இது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எதிர்வரும் நாட்களில் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி தான் முடிவு செய்வார்.
அமைச்சரவையை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குத் தான் உள்ளது.எனவே அவர் தான் அது தொடர்பில் தீர்மானிப்பார்.
அந்த தீர்மானத்தை எடுத்த பின்னர் எமக்கு அறிவிப்பார்.கற்பனையாக செயற்பட முடியாது என்றார்.