மகிந்தவுடன் நாளையதினம் தீர்மானம்மிக்க கலந்துரையாடல் - ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்கள் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் தொடங்கிய வேலைநிறுத்தத்தின் 91 வது நாள் இன்றாகும்.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனான(Mahinda Rajapaksa) முக்கிய கலந்துரையாடல் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
ஆசிரியர்கள் அதிபர் தொழிற்சங்கங்களுக்கு பிரதமருடன் கலந்துரையாடல் நடத்த வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க(Anurakumara Dissanayake) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்படி, பிரதமருக்கும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (11) நடைபெறும். அவர்களின் பிரச்சினைகள் இங்கு தீர்க்கப்படும் என்று நம்புவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.