வெளிநாட்டு மோகம் காட்டி பல கோடி ரூபாய் மோசடி! பெண்ணொருவர் கைது
ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கிட்டத்தட்ட ஒரு கோடியே ஆறு மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒரு பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
15 முறைப்பாடுகள்
அவர் முன்னர் ருமேனியாவில் பணிபுரிந்ததாகவும், அந்த நாட்டில் தனது தொடர்புகளைப் பயன்படுத்தி பணம் பெற்று வாக்குறுதியளித்தபடி வேலைகளை வழங்கவில்லை என்றும் பணியகத்திற்கு 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது சந்தேக நபர் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
சந்தேகநபரான பெண், பிலியந்தலை, வெல்லம்பிட்டி, கொலன்னாவை மற்றும் கஹதுடுவ ஆகிய பகுதிகளில் இருப்பதாக தகவல் கிடைத்த போதிலும், அதிகாரிகள் ஒவ்வொரு முறை சோதனை நடத்தும்போதும் அவர்கள் வருவதற்கு முன்பே அவர் தப்பிச் சென்றுவிடுவதாக தெரியவந்துள்ளது.
கைது நடவடிக்கை
இந்த நிலையில், மோசடியில் சந்தேக நபருக்கு உதவிய மேலும் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

இறுதியாக, விசாரணை அதிகாரிகள் ஒரு தரகர் மூலம் சந்தேக நபரைத் தொடர்பு கொண்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட கொலன்னாவையில் உள்ள ஒரு சட்டத்தரணி வீட்டிற்கு வருமாறு அழைத்து அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தபட்ட நிலையில் அவரை மார்ச் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |