அதிகரிக்கும் டெங்கு நோய் : 10 பிரதேசங்கள் அபாய வலயங்களாக அறிவிப்பு
இந்த ஆண்டில் (2023) சிறிலங்காவில் இதுவரை 63,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், அதில் 38 பேர் உயிரிழந்துள்ளனர், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எதிர்வுகூறியுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை அதாவது செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி வரை 62,935 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதில், கொழும்பு மாவட்டத்தில் 13,320 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கம்பஹாவில் 13,180 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், அதேபோல் களுத்துறை மாவட்டத்தில் 4,096 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர், கண்டி மாவட்டத்திலும் இன்று காலை வரை 5,295 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதிகளவான நோயாளர்கள்
மாவட்ட ரீதியில் அதிகளவான நோயாளர்கள் பதிவான மாவட்டமாக கொழும்பு மாவட்டம் காணப்படுகிறது.
இந்த வருடம் (2023) மேல் மாகாணத்தில் 30,596 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இது மாகாண ரீதியில் அதிகரித்த எண்ணிக்கையாகும்.
இந்த ஆண்டில் (2023) ஜூன் மாதத்திலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், அந்த மாதத்தில் மொத்தம் 9,916 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
மே மாதத்தில் 9,696 பேருக்கும், செப்டம்பர் மாதத்தில் இதுவரையில் 1,057 பேருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அபாய வலயங்களாக
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சிறிலங்காவிலுள்ள 10 பிரதேசங்களை டெங்கு அபாய வலயங்களாக அறிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களில் டெங்கு நோய்தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்படுகின்றது
இருப்பினும், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் பெய்து வரும் கடும் மழையுடன் மீண்டும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.