வருமானம் ஈட்டும் நிறுவனங்களை மேற்பார்வையிட விசேட பிரிவு : மஹிந்தானந்த கோரிக்கை
உள்நாட்டு இறைவரி திணைக்களம் உட்பட நாட்டிற்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை மேற்பார்வையிட விசேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் நடைமுறைக்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இன்று (26) அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரச வரி வருவாயை அதிகரிப்பதற்கு உழைக்காத அதிகாரிகள் தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடமிருந்து 3101 பில்லியன் ரூபாவும், இலங்கை சுங்கத்திலிருந்து 1217 பில்லியன் ரூபாவும் கலால் திணைக்களத்திலிருந்து 217 பில்லியன் ரூபாவும் வருமான இலக்காக அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

ஆனால் இதுவரை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 956 பில்லியன் ரூபாவும், இலங்கை சுங்கம் 578 பில்லியன் ரூபாவும், கலால் திணைக்களம் 109 பில்லியன் ரூபாவும் அதாவது 1643 பில்லியன் ரூபா மட்டுமே வசூலித்துள்ளன” என்றார்.