ஆசியாவிலேயே மிகவும் மோசமாக செயல்படும் நாணயமாக ரூபாய்
இந்த மாதத்திற்குள் ஆசியாவிலேயே மிக மோசமாகச் செயல்படும் நாணயமாக இலங்கை ரூபாய் பதிவாகியுள்ளதாக 'புளூம்பெர்க்' தெரிவித்துள்ளது.
உலக அளவில் முன்னணி வணிக இணையதளமான புளூம்பெர்க், இலங்கை ரூபாய் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதோடு, அது மேலும் குறையக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர்
இந்நிலையில், இலங்கை மத்திய வங்கி இன்று (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் சிறியளவிலான மாற்றம் பதிவாகியுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை விலை 353 ரூபாய் 17 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய (21) நிலவரப்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 354 ரூபாய் 03 சதமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கட்டுப்பாடின்றி வேகமாக வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கட்டுப்பாடின்றி வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக அரசாங்கம் கடுமையான பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அக்கட்சி, தெளிவான பொருளாதாரத் திட்டம் இல்லாதமை மற்றும் நாட்டின் வெளிநாட்டு கையிருப்புகளை அதிகரிக்க அரசாங்கம் தவறியமை ஆகியவற்றின் காரணமாகவே அமெரிக்க டொலரின் மதிப்பு வேகமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 20 மாதங்களுக்கு முன்பு தற்போதைய அரசாங்கத்திடம் நாட்டை ஒப்படைக்கும் போது, டொலரின் மதிப்பு 292 ரூபாயாகக் காணப்பட்டது என்பதை ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார வேலைத்திட்டத்தை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லத் தவறியதன் காரணமாகவே, தற்போது டொலரின் மதிப்பு 354 ரூபாய் வரை அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |