மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் களஞ்சியப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் அழிப்பு
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையம் ஒன்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பொது மக்களால் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போதே குறித்த வர்த்தக நிலையம் இனங்காணப்பட்டது.
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேர்ட், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகரசபை சுகாதார பரிசோதகர் இணைந்து ஆய்வு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
வர்த்தக நிலையம் மீது நடவடிக்கை
இதன் போது கலாவதியான உணவு பொருட்களை காட்சி படுத்தியமை, அழுகிய மரக்கறி பழங்களை காட்சிபடுத்தியிருந்தமை, உணவு பொருட்களை உரிய வகையில் களஞ்சியப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வர்த்தக நிலையம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வர்த்தக நிலையத்தின் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் வர்த்தக நிலையத்திற்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட உணவு பொருட்களையும் உடனடியாக அழிக்குமாறு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகரசபை சுகாதார பரிசோதகர் மற்றும் நகரசபை ஊழியர்கள் இணைந்து குறித்த உணவு பொருட்களை மீண்டும் எந்த ஒரு தேவைக்கும் பயன்படுத்த முடியாத வகையில் அழித்தனர்.
இதன்போது 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான உணவு பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |