கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக வெடித்த போராட்டம்
இடமாற்ற கோரிக்கையை முன்வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக வெளிமாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று (21) காலை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2021, 2022 ஆம் ஆண்டுகளில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அலுவலகங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் கிடைத்து 5 வருடங்களாகியும் தமக்கு இன்னும் சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லையென அவர்கள் சுட்டிக்காட்டினர்.
5 வருடங்களாக பணியாற்றினர்
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 2021, 2022 காலப்பகுதியில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டகளைச் சேர்ந்த சுமார் 500 பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்கப்பட்டது.

தற்போது சுமார் 50 பேர் அளவிலே திருகோணமலையில் கடமை புரிகின்றோம். இந்நிலையிலேயே எமது நியாயமான இடமாற்றத்தினை கோரியே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சம்பளப் பிரச்சினைகளுக்கு மத்தியில் உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்திற்காக சம்பளத்தின் பெரும்பகுதியை செலவு செய்து பல கஷ்டங்களுக்கு மத்தியில் 5 வருடங்களாக பணியாற்றி வந்துள்ளோம்.
இடமாற்றம் பெற்றுத் தருமாறு கோரிக்கை
இதில் பெரும்பாலானவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், இவர்களில் 95 வீதமானோர் திருமணமானவர்கள் இவ்வாறு எமக்கு பிரச்சினைகள் இருக்கும்போது எமது சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்றுத் தருமாறு பல்வேறு தடவைகள் வலியுறுத்திய போதிலும் இன்னும் பலனளிக்கவில்லை.

இவ்வருடத்திற்கான இடமாற்ற பட்டியலில் எமது பெயர்கள் இடம்பெறவில்லை. எனவே எங்களுடைய சேவையினையும், அர்ப்பணிப்பினையும் கருத்தில் கொண்டு 2027 ஆம் ஆண்டு இடமாற்றத்திற்கான பட்டியலில் எங்களை சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்க மனிதாபிமான ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் அரசிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |