இதுவே சரியான நேரம் : தோனி எடுத்த அதிரடி முடிவு
நாளையதினம்(21) ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாக உள்ள நிலையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பு ருத்துராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தலைமைப்பொறுப்பு மாற்றத்திற்கு இதுவே சரியான நேரம் என தோனி கருதியதால் இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளதாக அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தோனி எடுத்த முடிவு
அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தோனி எடுத்த முடிவு இது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் தலைமைப் பொறுப்பு குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. அதில் ருத்துராஜ் சிறப்பாக செயல்பட்டார்.
அணியில் பல வீரர்கள் கடந்த ஆண்டு காயமடைந்து இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் எனவே பந்து வீச்சில் இந்த ஆண்டு சிறப்பாக செயல்படுவோம்.
நிறைய விஷயங்களை கற்றுள்ளோம்
எம்.எஸ். தோனி காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 2022ஆம் ஆண்டு ஜடேஜா-வை தலைவராக நியமனம் செய்ததில் இருந்து நிறைய விஷயங்களை நாங்கள் தற்போது கற்றுள்ளோம்.எனவே கடந்த முறை இல்லாத வகையில் அணி சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கிறோம்.
ஜடேஜா முழுமையாக ருத்துராஜ் கெய்க்வாட் பக்கம் உள்ளார். அணியின் தலைவராக முடிவுகளை ருத்ராஜ் எடுப்பார். இருந்தாலும் நிச்சயம் அவர் தோனி, ஜடேஜா போன்ற மூத்த வீரர்களின் அலோசனையை மைதானத்தில் பெறுவார். அதில் அவருக்கு எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |