திலீபனின் ஊர்தி மீதான தாக்குதல்:திருகோணமலை சிவில் சமூக ஒன்றியம் வன்மையான கண்டனம்
திருகோணமலை சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம், தியாக தீபம் திலீபன் ஊர்தி மீதும், அதன் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழ் சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலை மிக வன்மையாகக் கண்டித்துள்ளது.
வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“நினைவு கூருதல் என்பது உரிமை சார்ந்தது, கூட்டு நினைவு கூர்தல், ஒரு இனத்தின் வரலாற்றுடன் தொடர்புடையது. நினைவு கூருதலை மறுத்தல் என்பது ஒரு இனத்தின் வரலாற்றை மறுத்தலாகும்.
ஒரு இனத்தின் வரலாறு மறுக்கப்படும் போது அவ்வினத்தின் இருப்பு கேள்விக்குட்படுத்தப்படுவது மட்டுமல்லாது, பண்பாட்டு, சமூக, அரசியல் கூட்டு பண்புகளைச் சிதைப்பதுமாகும்.
இவ்வாறாக ஒரு இனத்தை கூட்டு சிதைவுக்குட்படுத்தும் போது அந்த இனத்தின் அழிவு தடுக்க முடியாமற் போகின்றது.
இனப்படுகொலை
இவ்வாறான இனப்படுகொலையின் உச்சியை தமிழினம் ஏற்கனவே முள்ளிவாய்க்காலில் சந்தித்திருந்தது மட்டுமல்லாது, இனப்படுகொலை வரலாற்றில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையாக தொடர்வதை இவ்வாறான சம்பவங்கள் வெளிக்காட்டி நிற்கின்றன.
நினைவு கூருதல் வன்முறையை உள்ளீடாகக் கொண்டதல்ல, அஹிம்சை சார்ந்தது. தியாக தீபம் திலீபன் நினைவு கூருதல் அவர் கையாண்ட அஹிம்சை முறைமையை முன்னெடுப்பதாகும்.
ஆனால் ஒரு இனத்தின் மேல் திணிக்கப்படும் அடக்குமுறை என்பது வன்முறை அணுகுமுறையை மட்டுமல்ல வன்மத்தையும் கொண்டது.
வன்முறையின் ஏகபோகத்தை சிறிலங்கா அரசு மத்திமை படுத்தியுள்ளதுடன் தனது படைக்கல உதவியுடன் விளிம்பு நோக்கி நகரத்தியும் உள்ளது.
நினைவு கூர்தல் உரிமையை அடக்குமுறைக்குள்ளாக்குதல் கருத்துச் சுதந்திரத்தையும், அதனை வெளிப்படுத்தும் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்துவதோடு அதனை மறுத்தலுமாகும்.
ஜனநாயகத்தின் அடிப்படை
ஜனநாயகத்தின் அடிப்படையை மேற்கூறப்பட்ட பண்புகளும் வரைவிலக்கணப்படுத்துகின்றன.மேற்கூறப்பட்ட பண்புகள் மறுக்கப்படும் போது ஜனநாயகம் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றது.
ஜனநாயகப் பண்புகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அரசுக்கு, அரசாங்கத்திற்கு அதன் கீழ் வரும் நிர்வாக அலகுகளுக்கும், சாதாரண பிரஜைகளுக்கும் உண்டு என்பதை மறுத்தலாகாது.
இதை நிலை நிறுத்த உழைக்க வேண்டியது எல்லாருடைய பொறுப்புமாகும்.
குறித்த சம்பவம் இனிமேல் இடம் பெறாது தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியத்தை திருகோணமலை சிவில் சமூக ஒன்றியம் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றது” - என்றுள்ளது.