தமிழரசுக் கட்சியின் அதிரடி அறிவிப்பு : 28 உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
இலங்கைத் தமிழரசுக்கட்சியில் (ITAK) மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 28பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் (P.Sathiyalingam) தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐந்து மாவட்டங்களின் பட்டியல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழரசுக்கட்சியில் மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 28பேருக்கு எதிராக இதுவரை ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒழுக்காற்று நடவடிக்கை
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தின் தீர்மானத்துக்கு அமைவாக, கட்சியின் தீர்மானத்துக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலின் போது செயற்பட்டவர்கள் தொடர்பில் மாவட்ட ரீதியாக ஆதாரங்களுடன் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு அமைவாக ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வவுனியாவிலும், திருகோணமலையிலும் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டங்களின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக, வைத்தியர் சிவமோகன் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
பா.அரியநேத்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கே.வி.தவராசா, மிதிலைச்செல்வி ஆகியோர் கட்சியிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் செயற்பட்டவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எழுத்துமூலமான கோரிக்கை
அந்தவகையில், மாவட்ட கிளைகளின் ஊடாக அவ்விதமாக செயற்பட்டவர்கள் தொடர்பில் வர்த்தமானி உள்ளிட்ட ஆதாரங்கள் திரட்டப்பட்டு அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்தவகையில், தற்போது வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 14பேருக்கு எதிராகவும், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 12பேருக்கு எதிராகவும், வவுனியா மாவட்டத்தினைச் சேர்ந்த இருவருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், அவர்களிடத்தில் விளக்கமளிப்புக்கான எழுத்துமூலமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை, அம்பாறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களின் பட்டியல்கள் இன்னமும் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் அதுகுறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |