விவாகரத்து திருமண முறிவே தவிர வாழ்க்கையின் அழிவு கிடையாது!
ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பமாகும். அவ்வாறான குடும்பம் ஒன்று உருவாக திருமணம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான ஓர் அம்சமாகும்.
சில பேருக்குத் திருமணம் குறிக்கோளாகவே இருக்கின்றது. திருமணம் ஒன்று நடப்பது என்றால் எத்தனையோ பொருத்தங்களைப் பார்த்து விடுகின்றோம்.
அத்தனை பொருத்தங்களையும் பார்த்துச் செய்யப்படும் திருமணம் பல காலங்களுக்கு நீடித்து விடுகின்றது. சிலரது திருமணம் இடையிலே நின்று விடுகின்றது. திருமண முறிவு என்றாலே வாழத் தெரியாதவர்கள், பொருத்தமற்றவர்கள், விட்டுக் கொடுக்காதவர்கள், சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் என்று பல பெயர்களைச் சமூகம் கொடுத்து வருகின்றது.
மேலும் திருமணம் இடையில் நின்றுவிட்டால் வாழ்க்கையே அழிந்து விட்டது போலும், வாழ்க்கையே நாசமாகி விட்டது போன்ற எண்ணக்கருக்கள் காணப்படுகின்றன.
இருந்தபோதிலும் இருவரால் தமது பிரத்தியேக வாழ்க்கை பற்றிய முடிவை அவர்கள் இருவரும் எடுக்கும்போது அதில் மூன்றாவது நபர் பாதிக்கப்படாத வரைக்கும் அவ்வாறான முடிவு ஒவ்வொருவரதும் சுய விருப்பம்.
இதில் சமூகம் நின்று சரி - பிழை கூறத் தேவையில்லை. ஒவ்வொருவருக்கும் திருமணம் செய்வதற்கு எந்தளவுக்கு உரிமை இருக்கின்றதோ அதே அளவுக்குத் விவாகரத்துச் செய்வதற்கும் உரிமை இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரது விவாகரத்தானது அவரது திருமண முறிவு தவிர வாழ்க்கையின் அழிவு கிடையாது.
விவாகரத்தை அவரது நன்னடத்தைகள் மற்றும் குணாதிசயங்களை ஒப்பிட்டு அவரைப் பிழையாக விமர்சித்தல் என்பது சமூகம் இன்றைக்கு வரைக்கும் செய்து கொண்டிருக்கும் ஒரு மனச்சாட்சியற்ற விடயமாகும்.
பிறரது வாழ்க்கையில் நாம் குறை கூறத் தயாராக இருக்கின்றோம் என்றால் எமது வாழ்க்கையிலும் குறை கூறுவர். அதையும் கேட்கத் தயாராக இருக்க வேண்டும். இதனை விட்டுவிட்டு அவரவர் குடும்பங்களைப் பார்க்கும்போது சமூகத்துக்கு இந்தக் குறைகூறும் வேலையே இருக்காதே. இருந்தபோதிலும் எமது சட்டமானது யாராவது ஒருவரைக் குறை கூறிய பின்னரே விவாகரத்து வழங்கும் என்ற விடயத்தில் மிகவும் உறுதியாக இன்றைக்கு வரைக்கும் இருக்கின்றது.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டிலிருந்து மாறுபட்டு இற்றைக்கு வாழ்க்கையைக் கொண்டு போவதற்கான சவுகரியத்தின் அடிப்படையிலேயே போக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தால் பொருத்தமாக இருக்கும்.
ஒவ்வொரு வாழ்க்கைத்துணையும் அவர்களது வாழ்க்கைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளும் முடிவாகும்.
ஆனாலும், சட்டரீதியாக ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திருமண உறவு சட்ட ரீதியாகவே முடிவுக்கு வரவேண்டும். அப்போதுதான் திருமணம் முடிவுக்குப் பின்னரும் ஏற்படக்கூடிய பல பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும் நிலைப்பாட்டை நீதிமன்றங்கள் கொண்டிருக்கின்றன. 17ஆம் நூற்றாண்டு வரை பிரிட்டன் நீதிமன்றங்களுக்குக்கூட திருமண பந்தத்தைப் பிரிப்பதற்கு (விவாகரத்து ஆணை வழங்குவதற்கு) அதிகாரம் காணப்படவில்லை.
அதன்பின்னர் நவீன நாகரிக வளர்சியாலும், வியப்புறும் தொழில்நுட்பத் தோற்றத்தாலும், தனிமனித சுதந்திரம் எனும் பரந்துபட்ட எண்ணக்கரு நலன்புரி அரசுகளிடையே ஏற்படுத்திய தாக்கத்தாலும் மிக வரையறுக்கப்பட்ட சில சந்தர்ப்பங்களில் மட்டும் விவாகரத்து வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதன் முக்கிய காரணம் அன்று சட்டமும் சமயமும் ஒன்றாகவே சமூகளவில் நோக்கப்பட்டது.
இலங்கையில் பல்லின, பல மதங்களைக் கொண்டவர்கள் வாழ்கின்றனர். அவர்களின் கலாசாரத்துக்கு அமைவாக விவாக, விவாகரத்துச் சட்டங்கள் இருக்கின்றன.
அதாவது கண்டிய சிங்கள மக்களுக்கு கரையோர சிங்கள மக்களிலிருந்து வேறுபட்ட சட்டமும், முஸ்லிம்களுக்கு அவர்களின் மதம் சார்ந்த இஸ்லாமிய சட்டமும் இருப்பதுடன் எல்லோருக்கும் பொதுவான சட்டமாக பொதுத் திருமணச் சட்டமும் உண்டு.
விவாகரத்தும் மறுமணமும் சமூகத்தால் பிழையாகப் பார்க்கப்படும் வரை குடும்ப வன்முறைகளும் வன்கொடுமைகளும் துஷ்பிரயோகங்களும் முற்றுப்பெறாதவை என்பது நிச்சயம். கிடைத்த வாழ்க்கையை வாழ்ந்தே ஆக வேண்டும் என்று இங்கு எவருக்கும் தலையெழுத்து கிடையாது.
துஷ்பிரயோகங்களை அனுபவிப்பதற்குப் பதிலாக விவாக முறிவு என்பது சிறந்ததாக அமையலாம். விவாகரத்து என்பது விருப்பம் சம்பந்தப்பட்ட விடயமாகும். இதில் முடிவெடுக்க வேண்டியது ஒவ்வொரு தனிமனிதனுமே தவிர சமூகமோ அல்லது உறவினர்களோ கிடையாது.
பஸ்றி ஸீ. ஹனியா
LL.B (Jaffna)
