மோட்டார் போக்குவரத்து திணைக்கள முன்னாள் உதவி ஆணையாளர் உட்பட மூவருக்கு பிணை
புதிய இணைப்பு
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள முன்னாள் பெண் உதவி ஆணையாளரையும் ஏனைய இரண்டு அதிகாரிகளையும் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக வாகனங்களை பதிவு செய்தமை தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பெண் உதவி ஆணையாளரும் ஏனைய இரண்டு அதிகாரிகளும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று காலை கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், சந்தேக நபர்களுக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடையும் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) முன்னாள் உதவி ஆணையாளர் உட்பட மூன்று அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை ஆணைக்குழுவினரால் (CIABOC) இன்று (14) குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நீதிமன்றில் முன்னிலை
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

