தளர்த்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு! மக்கள் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் - இராணுவத் தளபதி கோரிக்கை
நாடளாவிய போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானவை என கொவிட் 19 தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவசியமான சூழ்நிலைகளில் மாத்திரம் பொதுமக்களை வீடுகளில் இருந்து வெளியே செல்லுமாறும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை பொதுமக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது.
இன்று முதல் 31ஆம் திகதி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் இரவு 11 மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ள அவர் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்ட நேரங்களில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்.
கடைகள் வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தாலும் உரிமையாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களுடனேயே இயங்க வேண்டும்.
அடுத்த வாரங்கள் மிகவும் முக்கியமானவை இதன் காரணமாக மக்களை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.