தொடரும் இந்திய விமானங்களில் கோளாறுகள்: இன்றும் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
கோழிக்கோட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று(23) புதன்கிழமை காலை தோஹா சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். விமானத்தில் பணியாளர்கள் மற்றும் விமானிகள் உட்பட 188 பயணிகள் இருந்தனர்.
இரண்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு விமானம் பாதுகாப்பாக விமான நிலையத்தில் தரையிறங்கியது. காலை 9.07 மணியளவில் கோழிக்கோட்டிலிருந்து புறப்பட்ட விமானம் கபின் ஏர் கண்டிஷனிங் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முற்பகல் 11.12 மணிக்கு மீண்டும் தரையிறங்கியது.
விமானத்தின் கபின் ஏசியில் சில தொழில்நுட்ப கோளாறுகள்
“விமானத்தின் கபின் ஏசியில் சில தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தன. அது அவசர தரையிறக்கம் அல்ல” என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தினார். திரும்பியவுடன் பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.
விமான நிறுவனத்தின் கூற்றுப்படி, சிக்கலை சரிசெய்ய அல்லது மாற்று விமானத்தை வழங்க பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இது ஒரு “முன்னெச்சரிக்கை தரையிறக்கம்” என்றும், மதியம் 1.30 மணிக்குள் பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
நேற்றையதினமும் விமானத்தில் பற்றிய தீ
இதேவேளை நேற்றையதினம் ஹொங்கொங்கிலிருந்து டில்லிக்கு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் வந்து டில்லி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கிய நிலையில் சிறிது நேரத்திலேயே தீப்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
