மூன்று வருடங்களுக்கு மேல் உடைந்து விழுந்துள்ள வடிகான் : பாராமுகத்தில் அதிகாரிகள்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடி பொதுச்சந்தைக்கு முன்னால் அமைந்துள்ள வடிகான் உடைந்து விழுந்துள்ள நிலையில் அவ்வீதியைப் பயன்படுத்தி, பொதுச் சந்தைக்குச் செல்லும் மக்களும், வியாபாரதிகளும், மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
மிகநீண்ட காலமாக இந்த வடிகான் உடைந்துள்ளதனால் அவ்வடிகானில் தொடர்ச்சியாக நீர்தேங்கிக் காணப்பட்டுக் கொண்டே வருகின்றது. இதனால் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் உள்ளதாகவும் பொதுச் சந்தை வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பலனளிக்காத அதிகாரிகளிடம் முன்வைத்த கோரிக்கை
இந்நிலையில் சுமார் மூன்று வருடங்களாக இந்த வடிகான் உடைந்த நிலையில் காணப்படுவதாகவும், இதனை புனரமைத்துத் தருமாறு பலதடவைகள் கமநல அமைப்பினரிடமும், கமநல சேவைகள் திணைக்களத்தினரிடமும், கோரிக்கை விடுதிருந்தபோதும் தமது அந்த முயற்சி இன்னும் பயனளிக்கவில்லை எனவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

முச்சக்கரவண்டி சாரதி அருந்தப்பு
இதனிடையில் அண்மையில் முச்சக்கர வண்டி ஒன்று இந்த வடிகானிற்குள் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், மயிரிழையில் அதனைச் செலுத்திச் சென்றவர் உயிர் தப்பியதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே கமநல அமைப்போ, கமநல சேவைகள் திணைக்களமோ அல்லது பிரதேச சபையோ, யாராவது முன்வந்து உடனடியாக புனரமைப்புச் செய்வதோடு, நீர் தேங்கும் நிலமையையும் சீர் செய்து தருமாறு களுவாஞ்சிக்குடி பொதுச் சந்தை வியாபாரிகளும் பாதசாரிகளும், அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
