பொம்மைக்குள் மறைத்து சூட்சுமமாக கடத்தப்பட்ட போதைப்பொருள்
சீதுவ பகுதியில் ஒரு பொம்மைக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த இவர், தனது குழந்தையைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகி்னறது.
சீதுவ - ராஜபக்ஸபுர பகுதியில் இன்று (26) காலை காவல்துறையினர், காவல்துறை சிறப்புப் படை மற்றும் முப்படையினரால் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த பெண் கைதுசெய்யப்பட்டார்.
பொம்மையை பரிசோதித்த காவல்துறை
அந்தப் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியை சோதனை செய்தபோது, ஒரு அறையில் ஒரு குழந்தையுடன் இருந்த ஒரு பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு பொம்மையுடன் வெளியே வந்தார்.
இதனை தொடர்ந்து பொம்மையை பரிசோதித்த காவல்துறையினர் அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் மற்றும் ஹெராயின் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் மின்னணு தராசு ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் அந்தப் பெண்ணின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல ஐஸ் போதைப்பொருள் பொதிகளையும் காவல்துறை கண்டுபிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான மூத்த காவல்துறை கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
